

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது நேற்று முன்தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் நகல் ஞானசேகரனிடம் நேற்று வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலை.
வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆன்லைன் வாயிலாக முதல்கட்ட குற்றப் பத்திரிகையை நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர்.
தொடர் விசாரணை: ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குமூலம், ஆதாரங்கள், ஆவணங்கள், சொத்து முடக்க நடவடிக்கை, சாட்சியங்களை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப் படுவதாகவும், தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில் தேவைப்படின் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ள தாகவும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அல்லிகுளம் நீதிமன்றத்துக்கு மாற்றம்: இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை 9-வது நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த குற்றப்பத்திரிகை நகலானது ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டது. இதை கையெழுத்திட்டு அவர் பெற்றுக் கொண்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.