Published : 26 Feb 2025 07:13 AM
Last Updated : 26 Feb 2025 07:13 AM
மத்திய அரசின் வேளாண்மை சந்தைப்படுத்தலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பான கருத்துகேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டியவை குறித்து எடுத்துரைத்தனர். பலர் கோரிக்கை மனுவாகவும் கொடுத்தனர்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் 17 பெரிய ஆற்றுப் பாசனமும் 84 பெரிய, சிறிய நீர்ப்பாசன அணைகளும் 41,948 ஏரிகள், குளங்கள் உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் ஆண்டுதோறும் 13,962 கோடி கனஅடி நீரை நிரப்பிடலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பாசன ஆதாரங்களை தூர்வாரி, செப்பனிட்டு முழு கொள்ளளவில் தண்ணீரைத் தேக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே மாநில அரசு செய்திட வேண்டும். மத்திய அரசின் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்வதற்கு மாநில அரசு அனுமதிக்கக் கூடாது. மாநில அரசே பயிர்க் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கும் வகையில் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
நெல்லுக்கு மத்திய அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையோடு சேர்த்து மாநில அரசும் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் அறிவிக்க வேண்டும். மாநில அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும்.
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் முதல்கட்டமாக 5 மாவட்டங்களில் விற்பனை செய்ய ஏற்கெனவே மாநில அரசு அறிவித்திருந்தது. இதை படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் விரிவுபடுத்த வேண்டும். மத்திய அரசின் வேளாண்மை சந்தைப்படுத்தலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதனை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT