ஓய்வூதிய குறைப்பு நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்: மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத்துவர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை மருத்துவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதனால், ஒவ்வொரு மூத்த ஓய்வுபெற்ற மருத்துவருக்கும் ஓய்வூதியத்தில் மாதம்தோறும் ரூ. 20 ஆயிரம் குறையும். இதனால் நூற்றுக்கணக்கான மூத்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி உள்ளனர். அவர்களுக்கு மிகுந்த சிரமத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துவதாக அரசின் இந்த உத்தரவு உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இதுபோல ஓய்வுபெற்ற மருத்துவர்களின் ஓய்வூதியத்தை குறைக்க முற்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஓய்வுபெற்ற மருத்துவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்த உழைப்பாலும், பங்களிப்பாலும் தான் சுகாதாரத்துறை இன்று மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக வலுவாக உயர்ந்து நிற்கிறது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இந்த ஓய்வூதிய குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓய்வுபெற்ற மருத்துவர்கள் தங்கள் குறைந்தபட்ச தேவைகளுடன், கவுரவமான வாழ்க்கையை மேற்கொள்வதை, இந்த ஓய்வூதிய குறைப்பு பாதிக்கும். கடந்த அதிமுக ஆட்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்த இன்றைய முதல்வர், தற்போது ஓய்வூதிய குறைக்க முயல்வது வேதனையை அளிக்கிறது. ஓய்வூதியத்தை குறைப்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். இது தவறான நடவடிக்கையாகும். இந்த அப்பட்டமான தொழிலாளர் விரோத போக்கை, மருத்துவர்கள் விரோத போக்கை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in