Published : 24 Jul 2018 02:16 PM
Last Updated : 24 Jul 2018 02:16 PM

அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே கோர விபத்து: இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தாய், மகன் பலி

அண்ணா சாலையில் வேகமாகச் சென்ற தண்ணீர் லாரி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய், மகன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

10 சக்கரம் கொண்ட அதிக அளவில் தண்ணீர் ஏற்றும் டாரஸ் வகை தண்ணீர் லாரி ஜெமினியிலிருந்து அண்ணா சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது சிக்னல் முடியும் நேரம் என்பதால் லாரி வேகமாகச் சென்றது.

ஸ்பென்சர் அருகே லாரி வலது பக்க சாலையில் சென்று ஜிபி சாலை செல்வதற்காக வலது பக்கம் திரும்பியது. அப்போது எதிர்ப்புறம் கிளப் ஹவுஸ் சாலையிலிருந்து எழும்பூர் எத்திராஜ் சாலை நோக்கி மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்க முயன்றது.

அண்ணா சாலையில் நேராகப் போகும் என எதிர்பார்க்கப்பட்ட லாரி, வலதுபக்கம் சாலையில் ஜிபி ரோடு நோக்கித் திரும்பவே, இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் லாரி மீது மோதினர்.

லாரி ஓட்டுநரும் வேகமாக லாரியை இயக்கியதால் உள்ளே தண்ணீர் இருந்ததாலும் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்த லாரி அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் முன் சக்கரம் ஏறியதில் லாரியின் அடியில் சிக்கியது.

லாரி வேகமாக மோதியதில் ஹெல்மட் அணிந்திருந்தும் வாகனத்தில் வந்த ஆணும் பெண்ணும் லாரியின் அடியில் சிக்கினர். இதில் லாரியின் முன்சக்கரம் ஏறி பின்சக்கரத்திலும் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரின் உடல்களும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கிடந்தது. விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் பாலச்சந்திரன் இறங்கி ஓடி விட்டார். பின்னர் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விபத்து நடந்த பகுதி ஸ்பென்சர் நான்குமுனை சாலை என்பதால் அருகிலிருந்த போக்குவரத்து போலீஸார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த இருவரும் தாயும், மகனும் என்பதும், வாகனத்தை ஓட்டி வந்தவர் பெயர் மகேஷ், அவரது தாயார் பெயர் நிர்மலா என்பதும் சேத்துப்பட்டை சேர்ந்த இவர்கள் மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது.

லாரியை ஓட்டிய பாலச்சந்திரன்(38) பூந்தமல்லி நென்னீர் குப்பத்தில் வசிக்கிறார். புவனகிரியைச் சேர்ந்த இவர் ஓம் சரவணா லாரி சர்வீஸில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். தப்பி ஓடிய அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

பரபரப்பான காலை நேரத்தில் நடந்த விபத்தால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்பென்சர் அருகே உள்ள சிக்னல் முக்கியமான சிக்னல் ஆகும். ஜெமினியிலிருந்து வரும் வாகனங்கள் சாலை அகலமாகப் பிரியும் இடத்தில் வேகமாக வருகின்றனர். அருகிலேயே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பெண்கள் கல்லூரிகள் உள்ளதால் பாதசாரிகள் வேகமாக சாலையைக் கடக்கின்றனர். நான்குவழிச்சாலை என்பதால் எந்நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டிய சாலை. ஆனால் போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கும்போதே பாதசாரிகள் சாலையை அலட்சியமாகக் கடப்பதை போலீஸார் கண்டுகொள்வதில்லை.

இந்த விபத்தும் சிக்னல் முடியும் நேரத்தில் கிளப் ஹவுஸ் சாலையிலிருந்து வேகமாக கிளம்பிய மோட்டார் சைக்கிளை ஒழுங்குபடுத்தாததும், வேகமாக வரும் லாரிகளை கட்டுப்பாடான வேகத்தில் இயங்க அறிவுறுத்தாததும் காரணம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, இதே ஸ்பென்சர் அருகே உள்ள காவல் நிலையம் அருகிலேயே சாலையை இரண்டாகப் பிரிக்கும் சாலைத்தடுப்பில் எவ்வித எச்சரிக்கையும் வைக்காததால் மாலை நல்ல வெளிச்சம் உள்ள நேரத்தில், வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சாலைத்தடுப்பில் மோதி தூக்கிவீசப்பட்டு இரண்டு பேர் பலியானார்கள்.

இப்பகுதியில் போதிய போக்குவரத்து போலீஸாரை நிறுத்தி வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், குறுக்கும் நெடுக்குமாக போகும் வாகனங்களை கட்டுப்படுத்தவும், பாதசாரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x