ஓஎம்ஆர் டைடல் பார்க் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை போக்க ‘U’ வடிவ மேம்பாலம்: உதயநிதி ஸ்டா​லின் திறந்து வைத்​தார்

சென்னை, ராஜீவ் காந்தி சாலை, டைடல் பார்க் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள `U' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். உடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் ஜே.எம்.எச். ஹசன் மவுலானா, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல் உள்ளிட்டோர்.
சென்னை, ராஜீவ் காந்தி சாலை, டைடல் பார்க் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள `U' வடிவ மேம்பாலத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். உடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், எம்எல்ஏக்கள் ஜே.எம்.எச். ஹசன் மவுலானா, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல் உள்ளிட்டோர்.
Updated on
2 min read

சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) டைடல் பார்க் சந்திப்பில் ரூ.27.50 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘யு’ வடிவ மேம்பாலம் மற்றும் ரூ.11.30 கோடியில் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம் ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகரின் தொழில் வாய்ப்பை பெருக்கும் வகையிலும், சென்னையை தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி மாநிலமாக திகழும் வகையிலும் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, டைடல் பார்க் எனப்படும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை ராஜீவ் காந்தி சாலையில் அமைத்தார், அதனைத் தொடர்ந்து அந்த சாலையில் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை தொடர்ந்து அமைத்து வருகின்றன.

இப்பகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார். இச்சாலையில் டைடல் பார்க் சந்திப்பில் வாகனங்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதை கருத்தில் கொண்டு, ரூ.27.50 கோடி செலவில் `யு' வடிவ மேம்பாலமும், பாதசாரிகள் சாலையைக் கடக்க ரூ.11.30 கோடி செலவில் திருவான்மியூர் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் முதல் டைடல் பார்க் மேம்பாலம் வரையில் மேற்கு நிழற்சாலை சாலையின் குறுக்காக ஒரு நடைமேம்பாலமும் கட்டப்பட்டுள்ளன.

இப்பாலங்களை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்து பார்வையிட்டார். தற்போது, பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ள டைடல் பார்க் மேம்பாலம் 510 மீட்டர் நீளமும் 8.50 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இப்பாலத்தை ஒட்டி ராஜீவ் காந்தி சாலை மற்றும் தரமணி சி.எஸ்.ஐ.ஆர். சாலைகளில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவான்மியூர் பகுதியிலிருந்து, மத்திய கைலாஷ் மற்றும் தரமணி சி.எஸ்.ஐ.ஆர். சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பில் டிராபிக் சிக்னலுக்கு காத்திருக்காமல் இந்த பாலத்தின் வழியாக ஏறி அந்தந்த சாலைகளில் இறங்கி விரைவாகச் செல்ல இயலும்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபண்டியன் எம்பி., எம்எல்ஏக்கள் ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் எஸ்.பழனிவேல், தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பொறியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in