அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
Updated on
1 min read

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் தொடர்பாக, கோவைில் அதிமுக எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

கோவை செல்வபுரம் திருநகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் அம்மன் கே.அர்ச்சுணன். கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரான இவர், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாகப் பொறுப்பு வகிக்கிறார். 2016-21-ல் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

இந்நிலையில், ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார், எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி, அவரது வீட்டருகே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அம்மன் அர்ச்சுணன் மற்றும் அவரது மனைவியிடம் போலீஸார் விசாரித்தனர். இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி மற்றும் சுல்தான்பேட்டையில் உள்ள அவரது தொழில் நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

2016 மே முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் வருமானத்தைவிட ரூ.2.76 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். அதனடிப்படையில் நேற்று நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

சோதனை குறித்து அறிந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.ஏ.செங்கோட்டையன், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், பொள்ளாச்சி ஜெயராமன்மற்றும் எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அம்மன் அர்ச்சுணன் வீட்டருகே குவிந்தனர்.

இதுகுறித்து அம்மன் அர்ச்சுணன் கூறும்போது, ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. கோவையில் அதிமுகவினர் எழுச்சியாக இருப்பதால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்தியுள்ளனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in