கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார் |  படம்:ஜெ.மனோகரன்
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார் |  படம்:ஜெ.மனோகரன்

‘தமிழக சட்டப்பேரவையில் நாங்கள் செங்கோலை நிறுவுவோம்’ - தமிழிசை சவுந்தரராஜன்

Published on

கோவை: “மும்மொழி கொள்கை விவாகரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அறிவாலயத்தில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது என கூறிக்கொண்டு அச்சத்துடன் நடமாடுகின்றனர். செங்கலை அகற்றுவது மட்டும் அல்ல சட்டப்பேரவையில் செங்கோலையே நாங்கள் நிறுவுவோம்.” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நோக்கி பாஜக வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசாக உள்ளது.தற்போது மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளனர்.

பாலியல் பிரச்சினைகள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் சுகாதாரத் துறையும், பள்ளிக் கல்வித்துறையும் தன்னுடைய இரு கண்கள் என முதல்வர் கூறி வருகிறார். அவர் அரசு மருத்துவமனையை தவிர்த்து தனியார் மருத்துவமனையில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்.

முதல்வர், அமைச்சர்களின் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் எங்கு படிக்கின்றனர் என்பது அனைவருக்குமே தெரியும். எனவே திராவிட மாடல் அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.அவர்களுக்கு மும்மொழி தேவை, நமக்கு இருமொழியா? என மக்கள் உணர்ந்துள்ளனர். மத்திய அரசு ஒருபோதும் மொழியை திணிக்கவில்லை.

மற்றொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறோம்.ஆனால் பாஜக தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுவது போல் பேசி வருகின்றனர். பிரதமர் உள்பட நாங்கள் அனைவரும் தமிழ் மொழியை போற்றுகிறோம். எங்கள் கட்சி உறுதியோடு உள்ளது. எனவே பாஜக-வில் இருந்து அவர் விலகுகிறார், இவர் விலகுகிறார் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையான தொண்டர்கள் யாரும் விலக மாட்டார்கள். ரயில் நிலையங்களில் இந்தியில் எழுதப்பட்ட பெயர் பலகைகளை அழித்து குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகின்றனர். அவர்கள் குழந்தைகள் வைத்துள்ள இந்தி புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை அழிப்பார்களா?. அறிவாலயத்தில் இருந்து ஒரு செங்கலை கூட அகற்ற முடியாது என கூறிக்கொண்டு அச்சத்துடன் நடமாடுகின்றனர்.

செங்கலை அகற்றுவது மட்டும் அல்ல சட்டப்பேரவையில் செங்கோலையே நாங்கள் நிறுவுவோம். இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை தான் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in