சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிசி - எம்பிசி சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தீர்மானம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிசி - எம்பிசி சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தீர்மானம்
Updated on
1 min read

கோவை: கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனே எடுக்கப்பட வேண்டும் என பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட (பிசி மற்றும் எம்பிசி) சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு - ஓபிசி ரைட்ஸ் சார்பில், மாநில உயர்நிலைக் கூட்டுக் கமிட்டி கூட்டம் கோவையில் நடந்தது. தலைவர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். உப தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் திருஞானசம்பந்தம், அமைப்பாளர்கள் குணசேகரன், சர்வேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஓபிசி மக்களுக்கு, கல்லூரிகள், உயர்கல்வி நிலைய சேர்க்கைகளில் முன்னுரிமை / சலுகை, கல்வி கற்கும் காலத்தில் அனைவருக்கும் அரசு கல்வி உதவித்தொகை, நிபந்தனை - வட்டி - ஈடு இல்லாமல் கல்விக்கடன், கல்லூரிகளில் படிப்பு முடிந்த பின், அரசு - பொதுத்துறை நிறுவனங்களில் முன்னுரிமையில் வேலைவாய்ப்பு, பறிக்கப்பட்ட பின்னடைவு பணியிடங்களை திரும்பித் தருதல், அவ்விடங்களில் ஓபிசி இளையோரை பணி அமர்த்துதல் ஆகிய அடிப்படை உரிமைகளை அளித்துள்ளன.

மத்திய அரசு, மொத்தம் உள்ள பணியிடங்கள் 48.67 லட்சத்தில், ஓபிசி மக்களுக்கு இதுவரை 8.55 லட்சம் பணியிடங்களை மட்டுமே தந்துள்ளது. அதாவது, 27 சதவீத இடஒதுக்கீட்டில் சுமார் 4 லட்சம் பணியிடங்களை இன்னும் தரவில்லை. இப்பணியிடங்களை உடனே ஓபிசி இளையோருக்குத் தரவேண்டும். விகிதாச்சார அடிப்படையில் ஓபன் கோட்டாவிலும் சுமார் 4.75 லட்சம் பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 8.75 லட்சம் பணியிடங்கள் மறுக்கப்பட்டுள்ளன.

இப்பணியிடங்களில் ஓபிசி இளையோரை 2026-ம் ஆண்டு இறுதிக்குள் பணியமர்த்திட வேண்டும். சமூகநீதி, இளையோர் நலம் பற்றி பேசும் தமிழக அரசு, 14 லட்சமாக இருந்த அரசு பணியிடங்களை 9 லட்சமாகக் குறைத்துள்ளது. மேலும், பிசி, எம்பிசி மக்களுக்கான பின்னடைவு பணியிடங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

ஓபிசி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கொடுங்குற்றங்களாக அறிவித்து, அவற்றை பிணையில் விட முடியாத குற்றங்களாக பகுத்து உரிய சட்ட திருத்தங்கள் கொண்டுவர வேண்டும். உண்மையான சமூகநீதியை அளித்திட, கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து அடிப்படையிலான சாதிவாரி கணக்கெடுப்பு உடனே எடுக்கப்பட வேண்டும்.

தேசிய கல்விக்கொள்கை, மும்மொழி செயல்திட்டம் ஆகியவற்றில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டுமேயின்றி, அரசியல்வாதிகள் அரசியல் லாபநோக்கில் செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களது கோரிக்கையை எந்த அரசியல் கட்சி தேர்தல் அறிக்கையில் வெளியிடுகிறதோ, எழுத்துமூலம் உறுதி அளிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு நாங்கள் ஆதரவு தருவோம்.

எந்த கட்சியும் உறுதிமொழி தரவில்லையெனில், எங்களது அமைப்பு பலமாக உள்ள தொகுதிகளில், எமது அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவர். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in