Published : 24 Feb 2025 09:20 PM
Last Updated : 24 Feb 2025 09:20 PM
பல்லடம்: கள்ளுக்கு தடை விதித்தது தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி என பல்லடம் அருகே கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரியும், கள்ளை உணவாக அறிமுகப்படுத்த வலியுறுத்தியும், பல்லடம் - கோவை சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு இன்று (பிப்.24) நடந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி பேசியது: “கள்ளில் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியாததால், தடை விதித்தது தமிழக அரசு. அரசியலமைப்பு சட்டப்படி கள் ஒரு உணவு. கள் ஒரு உணவு, உரிமை ஆகும். அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடக்க வேண்டியது நம்முடைய கடமை ஆகும். இது தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.
கடந்த 38 ஆண்டுகளாக தமிழகத்தில் கள் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன்றைக்கு பனையை நம்பியுள்ள விவசாயிகள் பலர் இந்த தொழில் இருந்து வெளியேறிவிட்டனர். கள் தடை என்பது தமிழர்கள் மீதும், தமிழ் இனத்தின் மீதும் நடத்தப்பட்டு வரும் அநீதி. பனை, தென்னை மற்றும் ஈச்சம் மரங்களில் கள் இறக்க தமிழக அரசு அனுமதி தர வேண்டும். டாஸ்மாக் வருவாயை கொண்டு நலத்திட்டங்களும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதும் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள தலைகுனிவு.
ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவில் மதுவிலக்குக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு கள்ளுக்கு தடை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அங்கு திடீரென குழந்தைகள் மரணம் அதிகரிக்கவே மருத்துவக்குழு ஆராய்ச்சியில் இறங்கியது மருத்துவர் குழு. அதுவரை அங்கு குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் முக்கிய சத்தானதொரு உணவாக இருந்த கள், தடை விதிக்கப்பட்டதால் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கு கள்ளுக்கான தடை நீக்கப்பட்டது.
இது வரலாறு. அதேபோல் தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்,” என்று அவர் பேசினார். தொடர்ந்து மாநாட்டில் கள் அருந்தும் நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்று அருந்தி உறுதிமொழி ஏற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT