கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ‘ஃபேஸ் கேப்ச்சர்’ முறையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல்

மதுரையில்  அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின்  செயலாளர் ஏ.ஆர்.சிந்து, மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி  ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரையில்  அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் செயலாளர் ஏ.ஆர்.சிந்து, மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி  ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர் | படம்:எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

மதுரை: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ‘ஃபேஸ் கேப்ச்சர்’ முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து வலியுறுத்தினார்.

மதுரை மேலப்பொன்னகரம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் இன்று (பிப்.24) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து, மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிப்.22, 23-ல் நடந்த மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி மார்ச் 1-ம் தேதி முதல் மத்திய அரசின் கொள்கை முடிவின்படி (டி.எச்.ஆர்) இணை உணவு வழங்கும் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களுக்கு கண்கள், முகத்தை ‘ஃபேஸ் கேப்ச்சர்’ என்ற செயல்முறையில் புகைப்படம் எடுப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். கர்ப்பிணிகள் செல்போன் நம்பருக்கு வரும் ‘ஓடிபி’யை பதிவு செய்த பின்புதான் இணை உணவு கொடுக்க வேண்டியதுள்ளது. தினமும் 150 கிராம் இணை உணவு, ஊட்டச்சத்து மாவு, வாரத்தில் 3 முட்டை பெற இத்தகைய பதிவுகளை செய்ய மத்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மார்ச் 1-ம் தேதியிலிருந்து ‘ஃபேஸ் கேப்ச்சர்’ முறையை கடைபிடிக்க மறுத்தும், கைவிட வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும். அதேபோல், மார்ச் 4-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதுபோல அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கோடைவிடுமுறை 15 நாட்கள் என்பதை ஒரு மாதமாக அறிவிக்க வேண்டும்,” என்று அவர்கள் கூறினர். இந்த சந்திப்பின்போது, மாநிலத் தலைவர் ரத்தினமாலா, பொருளாளர் எஸ்.தேவமணி. மாவட்டச் செயலாளர் வரதலட்சுமி, மாவட்டப் பொருளாளர் ரமேஷ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in