

சென்னை: “அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு பெண்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.24) நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலரை பழனிசாமி வெளியிட, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் 77 கிலோ எடை கொண்ட ஜெயலலிதா பிறந்தநாள் கேக்கை, பழனிசாமி வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஏற்பாட்டில், தொண்டர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். கட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, மகளிர் ஆரோக்கியத்துக்கான 11 பொருட்கள் அடங்கிய மருத்துவ பெட்டகத்தையும் பழனிசாமி வழங்கினார். தொடர்ந்து தையல் இயந்திரம், கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மகளிருக்கு வழங்கினார்.
பின்னர் அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர் அணியை தொடங்கி வைத்து, அதில் இணைந்த 2 ஆயிரம் பேருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த அணியின் லட்சிணையையும் வெளியிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் இருக்கும் இளைஞர்களை, சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் விதமாக கட்சியில் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறோம் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. இன்று நாள்தோறும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனை அளிக்கிறது. தவறு செய்பவர்கள் மீது அதிமுக ஆட்சியில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று திமுக ஆட்சியில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.
வேலையே பயிரை மேய்வது போல ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை ஆகியவை இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக இருந்தன. ஆனால் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணைப் பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.