Published : 24 Feb 2025 06:24 AM
Last Updated : 24 Feb 2025 06:24 AM
சென்னை: ‘பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அதிகளவு பயன்பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களில் மிகவும் குறைவான அளவே முதலீடு என்ற போதிலும், 74 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வருகிறது. எனினும், இந்நிறுவனங்கள் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாத நிலையில் உள்ளன. எனவே, இத்தகைய உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை திறம்படகையாளவும், நன்கு செயல்படும் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், புதிதாக உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களை அமைக்கவும், ஏற்கெனவே இயங்கிவரும் நிறுவனங்களை மேம்படுத்தவும், ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தனிப்பட்ட குறு நிறுவனங்களின் போட்டித் திறனை அதிகரித்து, அதன் மூலம் முறைப்படுத்துதலை ஊக்குவிக்கவும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகளின் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விநியோகம் செய்யும் இணைப்பினை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள குறுந்தொழில் நிறுவனங்களுக்கும், நன்கு செயல்படும் நிறுவனங்களின் விரிவாக்கத்துக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.10 லட்சம் வரை மானியம்: அதன்படி, தனிநபர் மற்றும் மகளிர் குழு, உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு, குறு நிறுவனங்களை தொடங்குவதற்கு நிதியுதவி, கூட்டுறவு அமைப்புகளுக்கு இயந்திர தளவாடங்கள் திட்ட மதிப்பில், 35 சதவீதம் மானியம், அதிகபட்சம், ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சிறு கருவிகள் வாங்க சுய உதவிக் குழுக்களுக்கு அடிப்படை மூலதனத்திற்காக குழுவில் ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். மேலும், பொதுவான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு திட்டமதிப்பில் 35 சதவீத மானியத்துடன் கடன் உதவி, வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும்.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அதிகளவு உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான கால அவகாசம் வரும் 2026 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமத்தின் அதிகாரிகள் கூறியதாவது: பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், 2024 அக். 3-ம் தேதி வரை 805 விண்ணப்பதாரர்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், மிக அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் 132 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 63 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 55 பேருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் குறு நிறுவனங்களுக்கு... இத்திட்டத்தின் கீழ், வரும் 2026-ம் ஆண்டுக்குள் 12 ஆயிரம் குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அதிகளவு பயன்பெறும் வகையில், இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதற்கான கால அவகாசம் வரும் 2026 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் விரைவாக பரிசீலித்து கடன் வழங்கவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT