

காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க, வரும் மார்ச் முதல் மே மாதம் வரை 3 மாதங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ.), ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எல்.ஐ.) விற்பனை செய்து வருகிறது. இக்காப்பீடுகளை எடுப்பவர்களில் சிலர் முறையாக பிரீமியம் கட்டத் தவறுகின்றனர். இதனால், காப்பீடுகள் காலாவதி ஆகி, அதன் பலன்களை பெற முடியாத நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு காப்பீடு காலாவதியான காப்பீட்டுதாரர்களின் வசதிக்காக, அஞ்சல்துறை சார்பில் காலாவதியான காப்பீடுகளை புதுப்பிக்க வரும் மார்ச் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இதில், காப்பீட்டு பிரீமியத்திற்கான காலாவதிக் கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. இதன்படி, அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீட்டுகளை புதுப்பிப்பதற்கான பிரீமியத் தொகை ரூ.1 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.2,500 வரை வழங்கப்படும்.
ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தாமத கட்டணத்தில் 25 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும்.
ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு மேல் தாமத கட்டணத்தில் 35 சதவீதமும், அதிகபட்ச தள்ளுபடி தொகை ரூ.3,500-ம் வழங்கப்படும் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.