மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் அறிவுறுத்தல்

தரமணியில் உள்ள விஎச்எஸ் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், மூத்த குடிமக்களுக்கான ஆரோக்கிய அட்டையை  வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் அறிமுகப்படுத்தினார். விஎச்எஸ் மருத்துவமனை கவுரவ செயலர் சுரேஷ் சேஷாத்ரி, பொதுமேலாளர்  ஸ்ருதி பார்கவா, நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் துறை தலைவர் உஷா ராம், துரைசாமி சிவகாமி ராமையா உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.படம்: எஸ். சத்தியசீலன்
தரமணியில் உள்ள விஎச்எஸ் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், மூத்த குடிமக்களுக்கான ஆரோக்கிய அட்டையை வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் அறிமுகப்படுத்தினார். விஎச்எஸ் மருத்துவமனை கவுரவ செயலர் சுரேஷ் சேஷாத்ரி, பொதுமேலாளர் ஸ்ருதி பார்கவா, நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் துறை தலைவர் உஷா ராம், துரைசாமி சிவகாமி ராமையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.படம்: எஸ். சத்தியசீலன்
Updated on
2 min read

சென்னை: 60 முதல் 70 வயதுக்குள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று டாக்டர் நடராஜன் அறிவுறுத்தினார். விஎச்எஸ் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பில், மூத்த குடிமக்களுக்கான 'ஆரோக்கியம் 100' நிகழ்வு தொடக்க விழா தரமணியில் நேற்று நடைபெற்றது.

இதை வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வி.எஸ். நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது: மூத்த குடிமக்கள் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளிப்பது அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும். மேலும், மூத்த குடிமக்களை எப்படி கவனிக்கிறார்கள், நிதி நிலவரம் என எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ள முடியும்.

மூத்த குடிமக்களுக்கு நோய் வந்தபிறகு, எல்லா மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு நோய் வராமல் காப்பதே மிக முக்கியம். 60 முதல் 70 வயதுக்குள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் தங்களுக்கு உடல் பிரச்னை இல்லை என்று நினைத்து கொண்டு இருப்பார்கள்.

ஆனால், இதயப் பிரச்சனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல நோய்கள் அமைதியாக அறிகுறியின்றி இருக்கும். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டால், பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கமுடியும்.

இதற்கடுத்து, நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, நிமோனியா தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். மேலும், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி, தேவைப்படுவோருக்கு போட்டு கொள்ளலாம். நிம்மோனியா தடுப்பூசி ஒரு முறையும், இன்ஃப்ளூயன்ஸா ஆண்டுக்கு ஒரு முறை போட்டு கொள்ள வேண்டும். இதன் மூலமாக, ரத்து அழுத்தம், சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும்.

அண்மைகாலமாக, மூத்தகுடிமக்களுக்கு வைட்டமின்-டி பற்றாக்குறை பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. கடும் வலியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக வருபவர்களை பரிசோதிக்கும்போது, வைட்டமின்- டி பற்றாக்குறை இருப்பது தெரிகிறது. இதற்கு உடலில் சூரிய ஒளி படாமல் இருப்பதே காரணமாகும். எனவே, நமது உடலில் சூரிய ஒளி பட வேண்டும். தினசரி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, புரதச்சத்து மிக்க உணவு எடுத்து கொள்ள வேண்டும். இதனால், உடல் நலத்தை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், விஎச்எஸ் மருத்துவமனை கவுரவ செயலர் சுரேஷ் சேஷாத்ரி கூறுகையில், "ஆரோக்கியம் 100 மூலமாக, மூத்த குடிமக்களுக்கு 100 நாட்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக, ஆரோக்கியம் அட்டை கொடுக்கப்படும்.

இந்த அட்டையில் பதிவு செய்தபிறகு, மருத்துவ சிகிச்சைக்கு 10 சதவீதம் சலுகை வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்காக, இலவச பதிவு, 5 கி.மீ. சுற்றளவுக்குள் இலவச ஆம்புலன்ஸ் வசதி ஆகியவை வழங்கப்படும். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு 9150017981 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

நிகழ்ச்சியில், கவி மாமணி துரைசாமி சிவகாமி ராமையா, மருத்துவமனை பொதுமேலாளர் (இயக்கம்) ஸ்ருதி பார்கவா, நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் துறை தலைர் உஷா ஸ்ரீராம், சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் கனகசபை, மருத்துவ ஆலோசகர் செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in