Published : 21 Jul 2018 05:40 PM
Last Updated : 21 Jul 2018 05:40 PM

ரூ.1200 கோடி மின்வாரிய டெண்டரில் தனியாருக்கு சாதகமாக விதிகளைத் திருத்த நிர்பந்தம்: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னையில் தரைக்குள் மின் கேபிள் பதிக்கும் திட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக ஒரே நிறுவனத்திற்கு ஆர்டரை அளிக்க விதிமுறைகளை மாற்றி தரமற்ற கேபிளை கொள்முதல் செய்ய முயல்வதாகவும் அமைச்சர் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்றும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஓர் அங்கமான, தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும்விதமாக ஜெயலலிதா பல்வேறு பணிகளை தொலைநோக்கோடு சிந்தித்து செயல்படுத்தினார். அந்தவகையில் அவரது சிந்தனையில் உதித்த திட்டம்தான், சென்னை மாநகரில் அடிக்கடி ஏற்படும் சீரற்ற மின் விநியோக குறைபாட்டை களையும் வகையில் திட்டமிடப்பட்ட, 400 கிலோ வோல்ட் திறன்கொண்ட அண்டர் கிரவுண்ட் கேபிள் பதிக்கும் திட்டமாகும்.

இதன்படி, கிண்டி, மணலி, புளியந்தோப்பு மற்றும் கொரட்டூரில் 400 கி.வோ. திறன்கொண்ட துணை மின்நிலையங்களை ஏற்படுத்தி அவற்றை இந்த 400 கி.வோ. கேபிள் மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பின் நிதி உதவியோடு இத்திட்டத்தை செயல்படுத்த முடிவாகி, 2012-ம் ஆண்டு இத்திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் செயல்முறைகள் இறுதிவடிவம் பெற்று, சுமார் 1200 கோடி ரூபாய்க்கு இந்த கேபிளை வாங்க 2013-ல் டெண்டர் கோரப்பட்டது.

அப்போது, இத்திட்டத்திற்கான நிதி உதவி செய்ய முன்வந்த ஜப்பான் நிதி நிறுவனம், தங்கள் நாட்டு கம்பெனிதான் இந்த கேபிளை சப்ளை செய்யும் என்று நிபந்தனை விதித்ததுடன், அதற்கேற்ற வகையில் டெண்டர் விதிமுறைகளை மாற்றச் சொன்னது. இந்த திடீர் நெருக்கடியால், அந்த டெண்டர் நடைமுறையை ரத்து செய்யவேண்டி வந்தது. அதன்பிறகு, ஜெயலலிதா எடுத்த தொடர் முயற்சியின் காரணமாக, அந்த ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன.

இப்படி, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக விதிகளைத் திருத்தினால், அதற்கு சட்டம் அனுமதிக்காது, நீதிமன்றமும் இதில் தலையிட்டு கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்படும் என்றெல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்தது ஜப்பான் நிதி நிறுவனம்.

இதனால், ஜெயலலிதா தனக்கேயுரிய துணிச்சலோடு ஒரு முடிவெடுத்து, விதிகளை மீறினால்தான் நிதி தருவோம் என்று அவர்கள் தொடர்ந்து சொன்னால் அப்படி ஒரு நிதியே வேண்டாம் என்று சொல்லி, வேறு நிதி ஆதாரங்கள் மூலம் இத்திட்டத்தை நிறைவேற்ற அறிவுரை சொன்னார்.

அதன்படியே, மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழுள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் வகுத்தளித்த விதிமுறைகள் அடிப்படையில், தமிழக மின் தொடரமைப்புக்கழகம் செயல்படுவதையும், அந்த விதிமுறைகளை மீறி டெண்டர் விதிமுறைகளை மாற்ற முடியாது என்பதையும் எடுத்துச் சொல்லி ஜப்பான் நிதி நிறுவனத்துக்கு இறுதி கெடு விதிக்கப்பட்டது.

அப்போதும் அவர்கள் உறுதியாக இருந்ததால், கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி அன்று நடந்த வாரிய அளவிலான டெண்டர் கமிட்டியின் கூட்டத்தில், ஜப்பான் நிதி நிறுவனத்தின் நிதியை இத்திட்டத்திற்காகப் பெறுவதை வாபஸ் பெறவும், டெண்டர் விதிமுறைகளை மாற்றுவதில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

இது ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த திட்டம் என்பதை மனதில் வைத்து, இதன்பிறகாவது வேகமாக செயல்பட்டிருக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமியின் அரசு, குறிப்பாக டாஸ்மாக் துறையையும் கவனிக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி நடந்துகொண்ட விதம்தான் வேதனைக்குரியது.

வாரிய அளவில் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு ஒப்புதல்பெற, நிதித்துறை செயலாளர், எரிசக்தி துறை செயலாளர் மற்றும் மின்வாரியத் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய மின்சார வாரியத்தின் மாதாந்திர வாரியக் கூட்டத்திற்கு பலமுறை இந்த விஷயம் எடுத்துச் செல்லப்பட்டும், அரசின் மேல் மட்டத்தில் உள்ள சிலரது ஆலோசனைப்படி, ஒரு முறைகூட இந்த விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.ஒப்புதலும் அளிக்கப்படவில்லை.

இதனால், ஜப்பான் நிதி நிறுவனத்தின் வீண் பிடிவாதத்தால் சுமார் ஐந்தாண்டுகள் வீணான நிலையில், மேலும் கால தாமதத்தை இந்த அரசு ஏற்படுத்தியது. இந்தத் தாமதம் ஏன் என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அதற்கான விடை இப்போது கிடைத்திருப்பதாக மின்வாரிய தரப்பிலிருந்து வரும் தகவல்கள் உணர்த்துகின்றன. ஜெயலலிதா, இத்திட்டம் தரமானதாகவும் நீண்டகால பலன் அளிப்பதாகவும், மக்களின் வரிப்பணம் வீணாகாமலும் இருக்கும் வகையில் டெண்டர் விதிமுறைகளை அமைக்கச் சொன்னார்.

ஆனால், அவரின் மறைவுக்குப் பிறகு அவரது திட்டங்கள், கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டு வரும் எடப்பாடி பழனிசாமியின் அரசு, இந்தத் திட்டத்திலும் அவரின் கனவுகளைச் சிதைக்கும் விதமாக நடந்துகொள்ள ஆரம்பிப்பதாக சந்தேகம் கிளப்புகிறார்கள் சில அதிகாரிகள்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்ட டெண்டர் விதிமுறைகளை மாற்றி எழுதும்படி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக நிர்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. உதாரணத்திற்கு சிலவற்றை சுட்டிக்காட்டுகிறேன். டெண்டரில் கலந்துகொள்ள விரும்பும் நிறுவனம் கேபிள் உற்பத்தியில் தாங்களே தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை மாற்றி, பிறநாட்டு தொழில் நுட்ப ஒத்துழைப்பை பெற்ற இந்திய நிறுவனமும் கலந்துகொள்ளலாம், அத்துடன் இந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஓராண்டுக்கு முன்பே போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் விதியை மாற்ற முனைகிறார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொழில்நுட்ப ஒத்துழைப்பு என்கிற நடைமுறையையே 2014-ம் ஆண்டு மின்வாரியம் ரத்து செய்துவிட்டது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. இந்த கேபிள் ‘எனாமல்’ பூசப்பட்டதாக இருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த எனாமல் பூசப்பட்ட கேபிள் தயாரிப்பில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று முந்தைய விதி இருக்கிறது.

இந்த எனாமல் பூசப்பட்ட கேபிளின் மின் கடத்தி திறன் 1495 ஆம்ப்ஸ். இதை, எனாமல் இல்லாத கேபிளாக இருந்தாலும் பரவாயில்லை; தயாரிப்பு முன் அனுபவம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று மாற்ற முயற்சி நடக்கிறது. எனாமல் இல்லாத இந்த கேபிளின் மின்கடத்தும் திறன் 20% குறைவு. அதாவது, 1245 ஆம்ப்ஸ் மட்டுமே.

இப்படி கேபிள் சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு, கேபிளை சப்ளை செய்ததும் 50 சதவிகிதம் பில் தொகை வழங்கப்படும். மீதமுள்ள தொகை, இத்திட்டத்தின் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில் படிப்படியாக வழங்கப்படும். இந்த விதியை மாற்றி, முதல் கட்டமாக 70 சதவிகித பணத்தை அளிக்கலாம் என்று முடிவு செய்ய முயற்சி நடக்கிறது.

இந்த மாற்றங்கள் எல்லாமே, டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த டெண்டரைப் பெறும் வகையில் நடப்பதாக நான் அறிகிறேன். அந்த நிறுவனம், இதுவரை 400 கி.வோ. திறன் கொண்ட கேபிளை தயாரித்ததே இல்லை; எனாமல் கேபிள் தயாரிப்பிலும் அவர்களுக்கு முன் அனுபவமில்லை என்றும் சொல்கிறார்கள். இது நிஜமானால், எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் உயிர் மற்றும் மிகப்பெரும்பாலான மக்கள், குறிப்பாக நடுத்தர மக்களின் வீட்டுடைமைப் பொருட்களின் பாதுகாப்போடு தொடர்புடைய மின் வினியோக விஷயத்தில், இப்படி ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கு விசுவாசமாக விதிமுறைகள் திருத்தப்படுமானால் ஜெயலலிதாவின் ஆன்மா அதை ஒருபோதும் மன்னிக்காது.

தவிர, இதுபோன்ற மிகப்பெரிய தொகைக்கு விடப்படும் உலகளாவிய டெண்டர்களில் குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் டெண்டர் விதிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு, ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்று, அந்த டெண்டரைக் கைப்பற்றவும் அதன் மூலம் பலரும் பெரும் தொகையை ஆதாயமாகப் பெறவும் நடக்கும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும்.

இந்த விதிமீறலுக்கு உடன்பட மறுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாக வரும் தகவல்களும் கவலை அளிக்கிறது. மின்துறை அமைச்சர் தங்கமணி இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, விதிமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும். சென்னை மாநகரில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் இனியும் தாமதப்படுத்தப்படாமல், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவேண்டும்.

ஜெயலலிதா அறிவுரை சொன்னபடி, மக்களின் வரிப்பணம் வீணாகாத அளவுக்கு தகுதியான, திறமையான ஏதோ ஒரு நிறுவனம் இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும் இத்திட்டம் நிறைவேற்றப்படுவதை மின்துறை அமைச்சர் உறுதிசெய்ய வேண்டும்'' என்று  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x