சிதம்பரத்தில் வரும் 26 முதல் 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா

சிதம்பரத்தில் வரும் 26 முதல் 5 நாட்களுக்கு நாட்டியாஞ்சலி விழா
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44-வது ஆண்டு நாட்டியாஞ்சலி வருகிற 26-ம் தேதி தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை 5 நாள்கள் தெற்கு ரத வீதி ராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நடைபெறுகிறது என அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 1981-ல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு 2014 வரை 33 ஆண்டுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து 2015-ம் ஆண்டு பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நாட்டியாஞ்சலியை நடத்தினர். இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் தெற்கு ரத வீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா நடத்தி வந்தனர்.

நடராஜர் கோயிலில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கோயில் பொதுதீட்சிதர்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு 44-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் வருகிற 26-ம் தேதி தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இன்று (பிப்.23) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாட்டியாஞ்சலி அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் ஏ,சம்பந்தம், "நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் வடமாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். இதில் 450-க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

இளம் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ளோம். சிதம்பரத்தில் நாட்டிய அஞ்சலி விழா தொடங்கிய பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கோயில்களில் சிவராத்திரி அன்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாட்டியப் பள்ளியும் அதிக அளவில் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு கலைகள் அனைத்தும் தமிழகத்திலிருந்து சென்ற நாட்டிய கலைகள் தான்" என தெரிவித்தார். நாட்டியாஞ்சலி அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன், துணைத்தலைவர் சக்தி ஆர்.நடராஜன், பொருளாளர் எம்.கணபதி மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in