Published : 23 Feb 2025 07:03 AM
Last Updated : 23 Feb 2025 07:03 AM

2,642 காலி இடங்களுக்கான அரசு மருத்துவர்களை தேர்வு செய்ய கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத் திறன் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி வழங்குகிறார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) சார்பில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இதில், எம்பிபிஎஸ் முடித்த 24 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் 14,855 பேர் தேர்ச்சி பெற்றனர். இதற்கிடையே, கூடுதலாக 89 காலி இடங்கள் கண்டறியப்பட்டதால், மொத்த காலி இடங்கள் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 12-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 4,585 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், அவர்களது பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, சென்னை எழும்பூரில் உள்ள நலவாழ்வு, குடும்பநல பயிற்சி நிலையத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியபடி, முதல் நாளில் மாற்றுத் திறன் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவித்தார்.

அதன்படி, மாற்றுத் திறன் மருத்துவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. கலந்தாய்வு 24-ம் தேதி வரை நடைபெறும். இதில் 2,642 மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் 26-ம் தேதி காலை நடைபெற உள்ள நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x