Published : 22 Feb 2025 05:43 AM
Last Updated : 22 Feb 2025 05:43 AM
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ‘பொது சுகாதாரத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு - 2025’ என்ற தலைப்பில் சர்வதேச சித்த மருத்துவ மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 278 ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பு கொண்ட ‘அகத்தியம் 2025’ என்ற நூலை வெளியிட்டார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி, பதிவாளர் மருத்துவர் க.சிவசங்கீதா, இந்திய ஆயுஸ் அமைச்சகத்தின் ஆயுர்வேத ஆலோசகர் மருத்துவர் கவுஸ்துபா உபத்யாயா, சித்த மருத்துவத் துறை தலைவர் மருத்துவர் என்.கபிலன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழகத்திலுள்ள 16 சித்த மருத்துவக் கல்லூரிகளின் சித்த மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து சாந்திகிரி சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர். இலங்கையில் இருந்து 2 பேராசிரியர்கள் நேரடியாகவும், 3 பேராசிரியர்கள் காணொலி காட்சி மூலமாகவும் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
இம்மாநாட்டில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் 3 அரசு மற்றும் 13 தனியார் என மொத்தம் 16 சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், 3,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆட்சி பொறுப்பேற்றபின், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தால் பல்கலை. செயல்பாட்டில் இருந்திருக்கும். ஆனால், அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். விதிப்படி, இரண்டாவது முறை அனுப்பினால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். விரைவில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்படத் தொடங்கும்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின், சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கலில், சித்த மருத்துவக் கல்லுாரி விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT