கற்க விரும்பும் மொழி குறித்து மாணவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: அண்ணாமலை

கற்க விரும்பும் மொழி குறித்து மாணவர்களிடம் கருத்து கணிப்பு நடத்தி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: அண்ணாமலை
Updated on
1 min read

எந்தெந்த மொழிகளை கற்க விரும்புகிறார்கள் என மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு அந்தந்த மொழிகளை பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, தமிழக அரசு, வழக்கமான மழுப்பல் காரணங்களோடு, இந்தி தவிர்த்து பிற மொழிகள் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லை என்று கூறியிருக்கிறது.

மத்திய அரசு இந்தி மொழியை மட்டுமே மூன்றாவது மொழியாகக் கொண்டு வரவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தமிழக அரசுக்கு முதலில் நன்றி. ஏற்கெனவே பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும்போது, உடனடியாக நீங்கள் வேறு இந்திய மொழிகளுக்கான ஆசிரியர்களை நியமித்து விடுவீர்கள் என்று, திமுக அரசை அறிந்த யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கான பணிகளைத் தமிழக அரசு தொடங்கலாம்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கருத்துக்கணிப்பு மேற்கொண்டு, எந்தெந்த மொழிகளைக் கற்க மாணவர்கள் விரும்புகிறார்கள் என்பதை முடிவு செய்து, அதன் அடிப்படையில் அந்தந்த மொழிகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும்.

மேலும், திமுக அரசு நினைத்தால் தமிழ் மொழியில் பட்டம் பெற்று, ஆசிரியர் பணி கனவுடன் இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, பக்கத்து மாநிலங்களின் தமிழக எல்லை மாவட்டங்களில் ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடைப்பதையும் உறுதி செய்யலாம். எனவே, கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in