

அதிமுக தொடர்பாக மாநகர சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீது தீர்ப்பு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி மனு அளித்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டை தலைமை பதவிகள் உருவாக்கப்பட்டது, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுக்குழுவில் அவைத் தலைவரை நியமித்தது, அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்டவற்றுக்கு எதிராக அதிமுக உறுப்பினராக இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் மீது தீர்ப்பு வழங்கும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திலும் கடந்த ஆண்டு சூரியமூர்த்தி மனு அளித்திருந்தார். அதற்கு ஆணையம் எந்த பதிலும் அளிக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவில், இவரது மனு மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விசாரணையை மேற்கொண்ட நிலையில், அதற்கு அதிமுக தடையாணை பெற்றது.
இதேபோல் பெங்களூரு வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கில், அதிமுக விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்.12-ம் தேதி நீக்கியது. இந்நிலையில், சூரியமூர்த்தி தேர்தல் ஆணையத்தில் சில தினங்களுக்கு முன்பு புதிய மனுவை அளித்துள்ளார். அதில், அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பல்வேறு வழக்குகள் மீது தீர்ப்புகள் வரும் வரை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை. அவர் வேறு கட்சி சார்பில் அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர். இவரை போன்றவர்கள் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்யவோ, வழக்கு தொடரவோ உரிமை இல்லை. உட்கட்சி விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் தான் வாதங்களை எடுத்து வைக்க முடியும். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான இவரது மனுவை தேர்தல் ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை. அதனால் இந்த மனுவை எந்த விசாரணையும் இன்றி நிராகரிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.