

தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் குறுகிய பார்வையுடன் கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (சமக்ர சிக்ஷா) திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க கோரியும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் (பிப்.20) கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தேசிய கல்விக் கொள்கை-2020 என்பது வெறும் சீர்திருத்தம் அல்ல. இந்தியாவின் கல்வி முறையை உலக தரத்துக்கு உயர்த்தும் தொலைநோக்கு பார்வையாகும். நமது மொழி, கலாச்சார பன்முகத் தன்மையை வலுப்படுத்துவதாகவும் அது உள்ளது.
தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான முக்கியமான தேசிய போட்டி தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகின்றன. பிரபல கல்வி நிறுவனங்களில் சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைப்பதன் மூலம் தமிழகத்தின் தனித்துவமான இலக்கிய, கலாச்சார மரபை கொண்டாடவும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. மேலும், அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்திய மொழிகள் அனைத்தையும் மத்திய அரசு ஒரே மாதிரிதான் நடத்துகிறது. அதற்கேற்ப, தமிழ் மொழியும் அதற்கான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
மாணவர்கள் தாய்மொழியில் தரமான கல்வி பெற தேசிய கல்விக் கொள்கை வழிசெய்கிறது. தமிழ் என்பது ஒரே ஒரு மாநிலத்துக்கு மட்டுமான அடையாளம் அல்ல; அது தேசிய பொக்கிஷம். எந்த மாநிலம் மீதும், எந்த சமூகம் மீதும் எந்த ஒரு மொழியையும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை. மாறாக, மாணவர்கள் அவர்கள் விரும்பும் மொழியிலேயே படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தும் கல்வியில் உரிய இடம் பெறுவதை உறுதி செய்து, வரலாற்று ரீதியான பிழையை தேசிய கல்விக் கொள்கை சரிசெய்கிறது.
சமூகம் மற்றும் கல்வி முன்னேற்றத்தில் தமிழகம் எப்போதும் வழிகாட்டியாக இருந்துள்ளது. நவீன கல்வியை வடிவமைத்தல், விளிம்புநிலை சமூகங்களை உயர்த்துதல், அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்தல் ஆகியவற்றில் தமிழகம் முன்னணியில் இருந்துள்ளது. எனினும், அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்பதால், தமிழகத்தில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும் இந்த கொள்கை வழங்கும் ஏராளமான வாய்ப்புகள், வளங்களை பெற முடியாமல் போகிறது.
நெகிழ்வுத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கொள்கை, மாநிலங்கள் தங்களது தனித்துவமான கல்வித் தேவைகளுக்கு பொருத்தமாக இதை அமல்படுத்த அனுமதிக்கிறது. மேலும், மத்திய அரசு உதவியுடனான சமக்ர சிக்ஷா போன்ற திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்தவை என்பதோடு, பிஎம் ஸ்ரீ பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கையின் முன்மாதிரி பள்ளிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், தங்களது அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடன் தேசிய கல்விக் கொள்கையை அணுகுவது பொருத்தமற்றது.
பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதம், மத்திய அரசால் மேம்படுத்தப்பட்டுள்ள ஒத்துழைப்பு கூட்டாண்மை உணர்வை முற்றிலும் நிராகரிப்பதாக உள்ளது. பாஜக ஆட்சி இல்லாத பல்வேறு மாநிலங்களும் அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துகின்றன. இந்த கொள்கை கல்வி தளத்தை விரிவாக்குவதை நோக்கமாக கொண்டது. எனவே, கல்வியை அரசியலாக்க வேண்டாம். நமது மாணவர்களின் உயரிய நலன் கருதி, அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.