

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் 37 சிறுவர்கள் ஆஜரானார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 பயின்ற மாணவி, 2022-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன.
இது தொடர்பாக 53 சிறுவர்கள் உட்பட 916 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இதில் 53 சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவர்கள் மீதான விசாரணை விழுப்புரத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய 53 பேரில் 37 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 16 பேர் ஆஜராகவில்லை.
வழக்கு தொடர்பாக 1,100 பக்க இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கில் தொடர்புடையவர்களின் இ-மெயில் முகவரியைப் பெற்று, அவர்களுக்கு அறிக்கையின் நகலை அனுப்பிவைக்குமாறு இளஞ்சிறார் நீதிக்குழும நீதிபதி (பொ) ராதிகா உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிட்டார்.