

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு பேராசிரியருக்கு செவாலியே விருது வழங்க பிரெஞ்சு மொழி பாராளுமன்ற கூட்டு அவை அறிவித்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. புதுவையில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பிரெஞ்சு பேராசிரியராக பணியாற்றி வரும் வெங்கடசுப்புராய நாயகருக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் புதுவை காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு நிறுவன பிரெஞ்சு துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.
15-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு நுால்களை மொழிபெயர்த்துள்ளார். சிறந்த மொழிபெய்ர்ப்புக்கு பிரெஞ்சு அரசு விருதும் பெற்றுள்ளார். தமிழின் சங்க இலக்கிய செல்வமான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றை முழுமையாக பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளார். பல தமிழ் சிறுகதைகள், கவிதைகளை பிரெஞ்சில் மொழி பெயர்த்துள்ளார்.
அவரின் மொழிபெயர்ப்பு சேவையை அங்கீகரிக்கும் வகையில் செவாலியே விருது வழங்க பிரெஞ்சு மொழி பாராளுமன்ற கூட்டு அவை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரலில் புதுவைக்கு வரும் பாராளுமன்ற குழுவினர் இந்த விருதை வழங்க உள்ளனர்.