Published : 21 Feb 2025 08:29 PM
Last Updated : 21 Feb 2025 08:29 PM
மதுரை: திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் விநியேகம் செய்யப்பட்ட விவகாரத்தில் சிக்கிய திண்டுக்கல் நிறுவனம் நெய், பால் பவுடர் தவிர்த்து பிற பால் பொருட்கள் தயாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி நிறுவனம் சார்பில் ஆர்.ராஜதர்ஷினி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: எங்கள் நிறுவனம் 1995 முதல் நெய், வெண்ணெய் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி செய்து வருகிறோம். திருப்பதி தேவஸ்தானத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க நெய் விநியோகம் செய்யும் ஒப்பந்தம் கடந்தாண்டு மார்ச் மாதம் எங்கள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. வேறு நான்கு நிறுவனங்களும் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்து வந்தது.
இந்நிலையில், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயடு கடந்தாண்டு செப். 15-ல் நூறு நாள் வெற்றிப் பேரணியில் முந்தைய அரசு திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் பிராணிகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட வழக்கு பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம், சிபிஐ, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்தக் குற்றச்சாட்டு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் நெய்யின் சோதனை அறிக்கை அடிப்படையில் எழுந்தது. இருப்பினும் எங்கள் நிறுவனத்தில் நெய் உற்பத்தி உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், எங்கள் நிறுவனத்தின் மொத்த உரிமத்தையும் நிறுத்தி வைத்து எப்எஸ்எஸ்ஏஐ மத்திய உரிமம் வழங்கும் அலுவலர் 14.2.2025-ல் உத்தரவிட்டுள்ளார். நெய் விநியோகத்தில் தான் பிரச்சினை. எங்கள் நிறுவனம் பால்கோவா, வெண்ணெய், தயிர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்களை உற்பத்தி செய்கிறோம். இப்பொருட்களில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியிருக்கும் போது மொத்த வர்த்தகத்தையும் நிறுத்துவது சட்டவிரோதம்.
எங்கள் நிறுவனத்தில் 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெருமளவு கடன் பெற்றுள்ளோம். எனவே நெய் தவிர்த்து பிறகு பொருட்கள் வர்த்தகத்துக்கான உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி லெட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்து நெய் தரமாக இல்லை எனக் கூறவில்லை. பின்னர் பழிவாங்கும் நோக்கத்துடன், பின்னர் தனியார் நிறுவனத்தின் சோதனை அடிப்படையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
மத்திய அரசு தரப்பில், “உரிய ஆய்வுகளின் அடிப்படையில் தான் உற்பத்தியை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, நெய், பால் பவுடர் உற்பத்தி உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது. அதே நேரத்தில் பிற பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தொடர்ந்து நடத்தலாம். மனு தொடர்பாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அலுவலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT