Published : 21 Feb 2025 08:27 PM
Last Updated : 21 Feb 2025 08:27 PM
திருநெல்வேலி: “வருங்காலங்களில் பள்ளிகளுக்கான நிதியை நிறுத்திவிட்டு தனியார் பெரு நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைத்துவிட்டு தனியார் மயமாக்க புதிய கல்விக் கொள்கைத் திட்டம் வழிவகை செய்யும். இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் படித்துக் கொள்ளலாம். ஆனால் 6-ம் வகுப்புக்கு பிறகு கட்டாயம் இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும். இத்திட்டம் தமிழ் மொழியை அழிக்கும் திட்டமாக இருப்பதால் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்,” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் பால் பண்ணை வளாகத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட பால் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்கள் சங்க ஆவின் நல்லுறவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப் பேரவை தலைவர் அப்பாவு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “14 வயது வரையிலான மாணவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்று கடந்த 2002-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த திட்டம் இப்போது சமக்ர சிக்ஷா அபியான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்மூலம் தமிழகத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு 40 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இத்திட்டத்துக்கான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும் 40 சதவீதம் மாநில அரசும் கொடுத்து வருகிறது. இத்திட்டத்துக்காக மத்திய அரசு தரும் நிதிரூ. 2,152 கோடியை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார்.
ஆனால், மத்திய கல்வி அமைச்சர் புரிதல் இல்லாமல் தேசிய கல்விக் கொள்கையுடன் சமக்ர சிக்ஷா அபியான், பிஎம்ஸ்ரீ திட்டம் ஆகியவைகளை இணைத்து குழப்பி வருகிறார். தேசிய கல்வி கொள்கையில் 3,5,8 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உள்ளது. குலக்கல்வி முறைக்கு செல்லும் அவல நிலை ஏற்படும் என்பதால் இந்த திட்டத்தை முதல்வர் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
பிஹார் மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் 51 சதவீதம் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதமாக குறைந்துவிட்டது. பிஎம்ஸ்ரீ என்ற திட்டத்தை இந்தியா முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 200 முதல் 300 பள்ளிகள் இத்திட்டத்தில் நல்ல கல்வித்தரம் மிகுந்த நல்ல கட்டமைப்புடன் பள்ளிகளை தேர்வு செய்து பிஎம்ஸ்ரீ என்ற ஸ்டிக்கரை ஒட்டி நாங்கள் நிதி தருகிறோம் என சொல்லும் நிலை உருவாக உள்ளது.
ஏற்கெனவே நல்ல படிக்கும் மாணவர்கள், நல்ல பள்ளிகளை வைத்திருக்கும் நிலையில் தமிழகம் இந்த திட்டத்தை எதிர்க்கிறது. இந்த திட்டத்தில் 60 சதவீதம் மத்திய அரசு நிதி தருவதாகவும் 40 சதவீதம் மாநில அரசு நிதியில் இந்த பள்ளிகளை இயக்க வேண்டும் எனவும் சொல்லி வருகிறார்கள். ஏற்கெனவே சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திலும் இதே போன்ற நிதியை தருவதாக சொல்லிவிட்டு நிறுத்தி வைத்துவிட்டார்கள்.
வருங்காலங்களில் இந்த பள்ளிகளுக்கும் நிதியை நிறுத்திவிட்டு தனியார் பெரு நிறுவனங்களிடம் பள்ளிகளை ஒப்படைத்துவிட்டு தனியார் மயமாக்க இந்த திட்டம் வழிவகை செய்யும். இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் படித்துக் கொள்ளலாம். ஆனால் 6-ம் வகுப்புக்கு பிறகு கட்டாயம் இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும். இத்திட்டம் தமிழ் மொழியை அழிக்கும் திட்டமாக இருப்பதால் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT