

சென்னை: “தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அதனை எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 3 மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும் எனக் கூறி வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘எங்களுக்கு இரு மொழிக் கொள்கையே போதும்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவருகிறார். அதோடு, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான காரசார விவாதங்கள் திமுக - பாஜக இடையே அதிகரித்துள்ள சூழலில், இப்பிரச்சினை நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறுகையில், “தமிழ்நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய நிதி உதவியை கேட்கிறோம், மாணவர்களுக்கு வர வேண்டிய ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம்.
அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் செய்வது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. தமிழகத்தின் கல்வி உரிமை அது. தற்போது யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக நேற்று, தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இதனை ஒட்டி, “கல்வியை அரசியலாக்க வேண்டாம் . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.” என்று வலியுறுத்தி தர்மேந்திர பிரதான் ஒரு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.