“இருமொழி கொள்கையால் மொழி திணிப்பை வெல்வோம்” - எடப்பாடி பழனிசாமி

“இருமொழி கொள்கையால் மொழி திணிப்பை வெல்வோம்” - எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: “எந்த ஒரு மொழியையும் எவராவது நம்மீது திணிக்கத் துணிந்தால் அதனை பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை “உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்” என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம். தமிழ் வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் 3 மொழிகளை மாணவர்கள் கற்க வேண்டும் என கூறி வருகிறது. தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தோடு வேறு ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இந்த கொள்கையை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு தனி கல்வி நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.

தமிழக அரசு மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்து வருகிறது. மும்மொழிக் கொள்கை என்பது இந்தி திணிப்புக்கு வழி வகுக்கும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான காரசார விவாதங்கள் திமுக - பாஜக இடையே அதிகரித்துள்ள சூழலில், அதிமுக இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in