

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மேலும், தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, ஆலைக்கு ஆதரவான அமைப்புகள் சார்பில் இந்திய உணவுக் கழக குடோன் அருகே இன்று (பிப்.20) ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என்று தகவல் பரவியதால், தூத்துக்குடியில் இந்திய உணவுக்கழக குடோன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் தூத்துக்குடியில் இன்று பரபரப்பு நிலவியது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்டெர்லைட் ஆலை பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற உத்தரவுபடி தற்போது வரை மூடப்பட்டுள்ளது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதரவாளர்களோ, பல்வேறு நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்களோ ஒன்று கூடி எந்த விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.