

சென்னை: அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தை ஒட்டி, தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அஞ்சலை அம்மாள் நினைவஞ்சலிக் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் போராடிய எங்கள் கொள்கைத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் நினைவு தினத்தையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன் மற்றும் உரிமைகளோடு, அவர்களின் பாதுகாப்பையும் மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: “இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் தனி முத்திரைப் பதிக்கும் அளவுக்கு பங்காற்றிய வீரப் பெண்மணி கடலூர் அஞ்சலை அம்மாளின் 64-ஆம் நினைவு நாள் இன்று. இந்த நாளில் அவரது வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்குகிறேன்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளைக் கண்டு அனைவரும் அஞ்சிய நிலையில், வெள்ளையர்களையே மிரள வைத்தவர் அஞ்சலை அம்மாள். கொடியவன் நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். கடலூரில் அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.”
பாமக நிறுவனர் ராமதாஸ்: தென்னிந்தியாவின் ஜான்சி ராணி என்று மகாத்மா காந்தியால் போற்றப்பட்ட வீரப் பெண்மணி கடலூர் அஞ்சலை அம்மாளின் 64-ஆம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவரது பங்களிப்பை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 1921 ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தியாவின் முதல் பெண்மணி. நிறைமாத கர்ப்பிணியாகவும், 9 வயது மகளுடனும் சிறை சென்றவர். அவரது தியாகமும், துணிச்சலும் போற்றத்தக்கவை. அஞ்சலை அம்மாளின் நினைவு நாளில் அவரின் தியாகத்தைப் போற்றி வணங்குவோம்.”