துன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக 53 வழக்குகள் பதிவு: ஒரே வழக்காக விசாரிக்க கோரி சீமான் மனு

துன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக 53 வழக்குகள் பதிவு: ஒரே வழக்காக விசாரிக்க கோரி சீமான் மனு
Updated on
1 min read

சென்னை: அரசியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக 53 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதால் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ரூபன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ``பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதாக எனக்கு எதிராக தமிழகம் முழுவதும் 53 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதனால் ஒவ்வொரு காவல் நிலையத்திலிருந்தும் விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. என் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கேட்டால் விளக்கம் அளிக்க மறுக்கின்றனர். காவல் துறையின் இணையதளத்தில் தேடினாலும் வழக்கு குறித்த விவரங்கள் இல்லை.

நான் எந்தவொரு தலைவரையும் இழிவுபடுத்தும் நோக்கில் பேசவில்லை. பொதுக்கூட்டங்களில் பெரியார் என்ன பேசினாரோ அதைப்பற்றித்தான் கருத்து தெரிவித்தேன். இதில் வேறு எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. ஆனால் அரசியல் ரீதியாக என்னைதுன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக பல்வேறு காவல் நிலையங்களில் 53 வழக்குகளைப் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

எனவே இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டுமென தமிழக உள்துறைச் செயலர் மற்றும் டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி எனக்கு சம்மன் அனுப்பி ஆஜராகும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்'' என அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in