

சென்னை: தமிழின் தொன்மையையும், பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் செம்பணி, தமிழ் உள்ளவரை நன்றியோடு போற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாதையர் 171-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும், பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் இன்று. மண்ணிலும், தீயிலும் மறைந்துபோக இருந்த தமிழர் வரலாற்று சுவடிகளை பதிப்பித்த அவரது செம்பணி தமிழ் உள்ள வரை நன்றியோடு போற்றப்படும்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உ.வே.சா. சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு தமிழக அரசு சார்பில் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஏஎம்வி. பிரபாகர ராஜா எம்எல்ஏ, துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி, செய்தி துறை செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் ந.அருள், செய்தி, மக்கள் தொடர்புதுறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் மு.பா.அன்புச்சோழன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட சமூகவலைதள பதிவில், ‘காலப் பழமையும், கருத்து செழுமையும் மிக்க சங்க இலக்கிய நூல்கள் உட்பட பழைய ஓலைச்சுவடிகளில் மறைந்திருந்த பல்வேறு தமிழ் இலக்கிய நூல்களை உலகறியச் செய்த பெருமைக்குரியவர். தள்ளாத வயதிலும், தளராத பிடிப்போடு, தடைகள் பல கடந்து தமிழ் தொண்டாற்றி தமிழுக்கும், தமிழருக்கும் உலக அளவில் போற்றுதலை பெற்றுத் தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் பிறந்தநாளில் அவர்தம் தமிழ் பற்றையும், பெரும் தொண்டினையும் போற்றி வணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு டிச.10-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள், ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்’ ஆக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்படி, டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 171-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெறும் ‘தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள்’ விழாவை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ``தமிழையும், உ.வே.சாமிநாத ஐயரையும் பிரித்துப் பார்க்க இயலாது என்று சொல்வார்கள். அதே போல, தமிழனின் தொன்மைக்கு சான்றளிக்கும் வகையில், தங்கப்பட்டயமாக சங்க இலக்கியங்களை நமக்கு தந்தவர். இனி ஆண்டுதோறும் உ.வே.சா.வின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழா அரசின் சார்பில் கொண்டாடப்படும்'' என்று வெகுவாகப் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து கு.ஞானசம்பந்தன் தலைமையில் கருத்தரங்கமும், ``தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிப் பங்களிப்பில் பெரிதும் விஞ்சி நிற்பது உ.வே.சாமிநாத ஐயரின் பழந்தமிழ்ப் பற்றே! நவீனப் பதிப்பு நெறிகளே!'' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெற்றன.