

சென்னை: சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் கோர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகுதியில் 207 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 982 குடியிருப்புகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிப்போர் முறையாக பராமரிப்புக் கட்டணங்களை செலுத்துவதில்லை. தவிர, அப்பகுதிகளில் குப்பை, கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்தது. அவற்றை சீரமைக்க போதிய நிதியின்றி வாரியம் சிரமப்பட்டு வந்தது.
இந்நிலையில் அப்பகுதிகளை பராமரிப்பது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் (பிப்.18) சென்னையில் நடைபெற்றது. இதில் மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளிலும் தூய்மைப் பணிகளை மாநகராட்சியே மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
ஒரு வாரத்தில் முடிக்க திட்டம்: அதன் அடிப்படையில் திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பு, எஸ்பிஐ காலனி, தலயங்குப்பம், மணலி புதுநகர் பகுதியில் பேஸ்-2 பகுதி, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், உதயசூரியன் நகர் பகுதிகள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நேற்று தற்காலிகமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணி அடுத்த ஒரு வாரத்தில் முடிக்கத் திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வாரிய திட்டப் பகுதிகளில் சாலை தூய்மைப் பணி, தெரு விளக்கு, மழைநீர் வடிகால், பூங்கா, திறந்தவெளி நிலம் பராமரிப்புப் பணிகள், வீடு வீடாக குப்பையை பெறுவது ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொள்வது எனவும், குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மன்ற கூட்டத்தில் தீர்மானம்: இதற்கான செலவினங்களை வாரியம் வழங்கும். மேற்கூறிய பணிகள் தொடர்பாக கணக்கீடு செய்து, வரும் மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உரிய அனுமதி பெறப்படும். வாரியத்திடம் நிதியைப் பெறும் நடைமுறைகள் தாமதமாகும் என்பதால், மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு திடக்கழிவுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக விரைவில் மாநகராட்சி டெண்டர் கோர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.