Published : 04 Jul 2018 07:42 AM
Last Updated : 04 Jul 2018 07:42 AM

குளிர்சாதன மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் உட்பட ரூ.134 கோடியில் 515 புதிய பேருந்துகள்: சென்னையில் முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படுக்கை, கழிப்பறை, குளிர்சாதனம் உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 515 புதிய பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் கே. பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார் பில் 21,744 பேருந்துகள், நாள்தோறும் 87 லட்சத்து 22 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் மூலம் 1 கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பயணித்து வருகின்றனர்.

இதுதவிர, புதிய வழித்தடங்கள், புதிய பணிமனைகள், அலுவலக கட்டிடங்கள், பணியாளர் ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் நிர்வாக வசதிக்காக செய்யப்பட்டு வருகின்றன. பயணிகளைப் பொறுத்தவரை, இணைய முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை, சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான இலவசப் பேருந்து அட்டைகள் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாநிலத்தில் புதிய பேருந்து சேவைகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு (சென்னை) 40 பேருந்துகள், விழுப்புரம் - 60, சேலம் -78, கோவை - 172, கும்பகோணம் - 64, மதுரை - 32, நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 69 பேருந்துகள் என ரூ.134 கோடியே 53 லட்சத்தில் 515 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத் துத் துறைச் செயலர் பி.டபிள்யூ. சி.டேவிதார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நவீன வசதிகள்

இந்த பேருந்துகளில், அரசு விரைவு போக்குவரத்துக்கழக வரலாற்றில் முதல்முறையாக குளிர்சாதன, படுக்கை வசதியு டன் கூடிய நவீன சொகுசு பேருந்துகள், இருக்கை வசதி மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இதுவரை சொகுசு மற்றும் குளிர்சாதன வசதி பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற் போது வழங்கப்பட்டுள்ள புதிய 40 பேருந்துகளில் 13 பேருந்துகள் குளிர்சாதன மற்றும் படுக்கை வசதி கொண்டவையாகும். ஒரு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்தில் கூடுதலாக கழிப்பறை வசதி உள்ளது. ஒரு பேருந்து குளிர்சாதன வசதியில் லாத இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டதாகும். மீதமுள்ளவற்றில் 2 பேருந்துகள் அல்ட்ரா டீலக்ஸ் வகை சொகுசு பேருந்துகளாகும்.

20 வழித்தடங்கள்

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 40 பேருந்துகளும் 20 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துக் கழகம் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை - சேலம், சென்னை - கோபி செட்டிப்பாளையம், சென்னை - போடிநாயக்கனூர், சென்னை - தர்மபுரி, சென்னை - ஈரோடு, சென்னை - மதுரை வழித்தடங்களில், இரு மார்க்கங்களி லும் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும், சென்னை - கரூர் வழித்தடத்தில் குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்தும் சென்னை - மதுரை இடையே குளிர்சாதன வசதியில்லா படுக்கை வசதி கொண்ட பேருந்தும் சென்னை - திண்டுக்கல் இடையே, குளிர்சாதன இருக்கை மற்றும் கழிவறை கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மற்ற பேருந்துகள் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

நிறம் மாறிய பேருந்துகள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது பேருந்துகள் வழக்கமாக, மெரூன் - மஞ்சள், பச்சை - இளம்பச்சை நிறங்களில் இருக்கும். ஆனால், தற்போது பேருந்துகளின் நிறம் மாறியுள்ளன. புதிய பேருந்துகள் அனைத் தும் நீலம், சாம்பல் மற்றும் மஞ்சள் கலந்த வண்ணத்தில் உள்ளன. பேருந்துகளின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இருக்கை கள் அனைத்தும் வழக்கமான பேருந்து இருக்கைகளைவிட சற்று அகலமாகவும் உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்துகள் அனைத்திலும், ஓட்டுநர் மது அருந்தியிருப்பதைக் கண்டறியும் விதமாக,‘பிரீத் அனலைசர்’ கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மது அருந்தியவர்கள் பேருந்தை இயக்க முடியாது. மேலும், அரசு பேருந்துகளில் வழக்கமாக அவ சரகால வழி இருக்காது. ஆனால், இந்த பேருந்துகளில் முன்புறம் ஜன்னல் அளவிலும் பின்புறம், கதவு அமைப்பிலும் அவசர கால வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டணம்

பேருந்துகள் இயக்கம், கட்டணம் தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு மட்டும் தற்போது 100 புதிய பேருந்துகளை இயக்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, தற் போது இருக்கை, குளிர்சாதன, கழிப்பறை உள்ளிட்ட நவீன வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அடுத்த 15 தினங்களில் மீதமுள்ள 60 பேருந்துகளும் இணைக்கப்பட்டு, இயக்கத்துக்கு வரும். இந்த பேருந்துகளில் பெரும்பாலும் சொகுசு பேருந்துகள்தான் இருக்கும்.

தமிழகத்தில் தற்போது குளிர்சாதன பேருந்துகள், சொகுசு பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கு தற்போது கிலோ மீட்டர் ஒன்றுக்கு ரூ.2 வீதம் வசூலிக்க முடிவெடுக் கப்பட்டுள்ளது.

இதன்படியான தோராயக்கட்டணம் பின்வருமாறு இருக்கும்.சென்னை- சேலம் : ரூ.700, சென்னை- மதுரை : ரூ.920, சென்னை- ஈரோடு : ரூ.790, சென்னை- தருமபுரி : ரூ.590, சென்னை- கரூர் : ரூ.760, சென்னை- கோபி செட்டிப்பாளையம்: ரூ.800 என கட்டணங்கள் இருக்கும் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x