

சென்னை: “மும்மொழிக் கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது. தமிழகத்துக்கு உரிய வரிப் பகிர்வு தருவதில்லை. மத்திய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை. கல்விக்கு நிதி இல்லை. இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. மத்திய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் உத்தியை செய்கிறார் பழனிசாமி” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் புகார்களை வைத்து அரசின் மீது அவதூறு பரப்புவதே பழனிசாமிக்கு தொடர் கதையாகிவிட்டது. புகார் வந்ததும் விரைவாக விசாரித்து கைது நடவடிக்கை எடுக்கிறது காவல் துறை. ஆனால், பாதுகாப்பில்லை என சொல்லி பெண் குழந்தைகளை அச்சுறுத்துவதே பழனிசாமிக்கு வழக்கமாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததும் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திமுக அரசை கண்டிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகும் பழனிசாமி அரசை விமர்சிப்பது தன்னை முன்நிறுத்தி கொள்ளும் அரசியலுக்குதானே? பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று தனித்தனியாக விசாரணை நடத்தி புகாரை உறுதி செய்தனர். அதன்பிறகு உதவி தலைமை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வந்துள்ளது. அதனால்தான் மாணவிகள் துணிந்து புகார் அளிக்கிறார்கள்.மும்மொழிக் கொள்கையை பாஜக புகுத்த முயற்சிக்கிறது. தமிழகத்துக்கு உரிய வரிப் பகிர்வு தருவதில்லை. மத்திய பட்ஜெட்டிலும் தமிழக திட்டங்கள் இல்லை. கல்விக்கு நிதி இல்லை. இப்போது பேரிடர் நிவாரணமும் இல்லை என தொடர்ந்து மோடி அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றி தன்னுடைய பாஜகவின் ராஜ விஸ்வாசத்தை காட்டுகிறார் பழனிசாமி. மத்திய அரசுக்கு அவப்பெயர் வராமால் இருக்க பாலியல் வன்கொடுமை என்று சொல்லி மடைமாற்றும் அரசியல் உத்தியை செய்கிறார் பழனிசாமி.
ஒருசில குற்றச் சம்பவம் நடப்பதை வைத்து ஒட்டுமொத்தமாக பள்ளிக்கூடங்கள் பாதுகாப்பில்லை என மாணவிகளையும் பெற்றோரையும் பழனிசாமி அச்சுறுத்துவது கேவலமான மனநிலையை காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு மற்றும் காவல் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் தமிழக அரசின் செயல்பாட்டை சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதிகள் கடந்த 17-ம் தேதி பாராட்டினர். அத்துடன், மேலதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுத்தால் நியாயம் கிடைக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிமன்றத்துக்கு தெரிந்து உண்மை கூட எதிர்க் கட்சித் தலைவருக்கு தெரியவில்லை.
பாலியல் வன்கொடுமை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. மிருகங்கள் மனிதர் போர்வையில் உலவுவதால் அவை கண்களுக்கு எளிதாக தெரியாது. அந்த மிருகம் குற்றம் செய்ததாக புகார் வந்ததும் உடனடியாக அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கிறது. பாலியல் குற்றவாளிகளை கைது செய்து தண்டனை பெற்றுத் தருகிறது திமுக அரசு என்பதை மறைத்து, அவதூறு அரசியல் செய்யும் அதிமுகவுக்கு தமிழக மக்கள் படுதோல்வியையே தருவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன. இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும்.
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல், பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால், இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன.
இந்த ஆட்சியில் தமிழகம் இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், ‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா? திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது. இனியாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.