Published : 19 Feb 2025 08:13 AM
Last Updated : 19 Feb 2025 08:13 AM
2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையினரின் சாகசத்தை பாராட்டி, அவர்களுக்கு இரட்டிப்பு பதவி உயர்வுகளைக் கொடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. கூடவே, 752 அதிரடிப்படை வீரர்களுக்கு அவரவர் மாவட்டங்களில் இலவசமாக வீட்டு மனைகளையும் பரிசாக வழங்கினார்.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு பொன்னம்மாபேட்டையில் உள்ள சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தலா 2 ஆயிரம் சதுர அடி வீதம் வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், 1991-ல் உருவாக்கப்பட்ட சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் அந்த மனைப்பிரிவானது கழிவு நீர் சூழ்ந்தும் குப்பை மேடாகவும் மாறியுள்ளது.
இம்மனைப் பிரிவை மாநகராட்சி வசம் ஒப்படைப்பதில் வீட்டுவசதி வாரியத்துக்கும் சேலம் மாநகராட்சிக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடப்பதால் அங்கு எவ்வித உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படாமல் கிடக்கிறது. இதனால், வீடு கட்டவே லாயக்கற்ற நிலையில் உள்ள மனைகளை பரிசு என்ற பெயரில் தங்கள் தலையில் கட்டிவிட்டதாக மனைகளைப் பெற்ற அதிரடிப் படையினர் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து பேசிய அவர்கள், “ஜெயலலிதா இந்த மனைகளை எங்களுக்கு வழங்கி 20 வருடம் ஆகப் போகிறது. இந்த மனைகள் குப்பை மேடாக, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியே கழிவு நீர் குட்டையாக இருப்பதால் எங்களால் வீடுகட்டவும் முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் மனமிறங்கி எங்களுக்கு மட்டுமல்லாது இங்கு வீட்டுமனைகளை பெற்ற மற்றவர்களுக்கும் பலனளிக்கும் விதமாக மனைகளை மறுசீரமைத்துக் கொடுக்க வேண்டும்” என்றனர்.
இந்த மனைப்பிரிவில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் என்ன பிரச்சினை என சேலம் மாநக ராட்சி ஆணையாளராக இருந்த ரஞ்ஜித் சிங்கிடம் கேட்டதற்கு, “1991-ல் உலக வங்கி கடனுதவியில் சீலாவரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனைகள் உருவாக்கப்பட்டது. இத்திட்டம் முடிந்த கையோடு 1994-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த மனைப்பிரிவை மாநகராட்சி வசம் ஒப்படைத்து இருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை அவர்கள் ஒப்படைக்கவில்லை. எங்கள் வசம் ஒப்படைக்காத மனைப்பிரிவில் நாங்கள் எப்படி அடிப்படை வசதிகளை உருவாக்க முடியும்? இது சம்பந்தமாக டிஆர்ஓ, வீட்டு வசதி வாரிய அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மாநகராட்சி வசம் சீலாவரி குடியிருப்பு மனைகளை ஒப்படைக்க அரசின் அனுமதியைப் பெறுவதற்கான கோப்புகள் சென்னை சிஎல்ஏ-வின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்துக்குள் எங்கள் வசம் மனைப் பிரிவு ஒப்படைக்கப்பட்டால், அங்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுக்கும்” என்றார்.
இது தொடர்பாக பேசிய சேலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன், “அந்த மனைப் பிரிவை மாநகராட்சி வசம் ஒப்படைக்க தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அங்கு 39 தெரு விளக்குகள் போடப்பட்டுள்ளது. விரைவில் அந்தப் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT