ஓட்டுநர் தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை: மஞ்சள் நிற பலகையுடன் பைக் டாக்சி இயக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

ஓட்டுநர் தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை: மஞ்சள் நிற பலகையுடன் பைக் டாக்சி இயக்க நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர்

Published on

சென்னை: வாடகை வாகனத்துக்கான மஞ்சள் நிற பலகையுடன் பைக் டாக்சி இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கத்தினருடன் போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இதில் அரசுத் தரப்பில் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, இணை ஆணையர் பொன் செந்தில்நாதன் உள்ளிட்டோரும், 25 சங்கங்களின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தினர் பெரும்பாலானோர் முதல் 1.5 கிமீ-க்கு ரூ.50, அடுத்தடுத்த ஒவ்வொரு கிமீ-க்கும் ரூ.25 என ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: `கும்டா' மூலமாக வாடகை வாகனங்களுக்கான செயலியை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்டோ கட்டணம் தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பைக் டாக்சியை பொருத்தவரை மத்திய அரசின் விதிகளை பரிசீலித்து வரைமுறைப்படுத்தப்படும். வாடகை வாகனத்துக்கான மஞ்சள் நிற பலகை பொருத்தி உரிமத்துடன் பைக் டாக்சி இயக்கப்படும். சங்கத்தினரின் கோரிக்கைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, அறிவுரை பெற்று தீர்வை சொல்வதாக அவர்களிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தொமுச பேரவைத் தலைவர் கி.நடராஜன் கூறும்போது, ``ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டும். வாடகை வாகன முன்பதிவுக்கான செயலியை அரசு உருவாக்க வேண்டும். பைக் டாக்சியை வரைமுறைப்படுத்த வேண்டும். இவற்றை விரைவாக செய்ய வேண்டும். திருத்தப்பட்ட மோட்டார் வாகன விதிகளில் கட்டண நிர்ணயத்துக்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் உசேன் கூறுகையில், ``ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து முதல்வர் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதால் வெகு விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அமைச்சர் உத்தரவாதம் அளித்துள்ளார். இதுபோல 3 மாதத்துக்கு ஒரு முறையாவது கூட்டம் நடத்த வேண்டும்'' என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in