Published : 19 Feb 2025 06:20 AM
Last Updated : 19 Feb 2025 06:20 AM
திருச்சிராப்பள்ளி, மதுரையில் ரூ.717 கோடியில் 12 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பூங்காக்கள் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை விரைவில் எய்தும் வகையில், அதிக முதலீடுகளை ஈர்க்கவும், தமிழக இளைஞர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு அரசு சிறப்பாக செயல்படுவதாக, மத்திய அரசின் 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி சூழல் அமைப்பை பரவலாக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பஞ்சப்பூரில் ரூ.403 கோடி மதிப்பீட்டில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் தகவல் தொழில்நுட்பம், ஐடிஇஎஸ், பிபிஓ, ஸ்டார்ட்அப்கள் இடம்பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் 5.34 லட்சம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் பன்னிரண்டு தளங்களுடன், தகவல் தொழில்நுட்பம், ஐடிஇஎஸ், பிபிஓ, ஸ்டார்ட்அப்கள் இடம்பெறும் வகையில் புதிய டைடல் பூங்கா அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
இப்பூங்காக்கள் சுமார் 12 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பு, குளிர்சாதன வசதிகள், 24 மணிநேரம் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம், திருச்சிராப்பள்ளி, மதுரை மாவட்டங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், தொழில் துறை செயலர் வி.அருண்ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT