Published : 19 Feb 2025 05:20 AM
Last Updated : 19 Feb 2025 05:20 AM
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்த ரூ.20 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் கைதான வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி ரூ.20 லட்சத்துடன் வந்த தனியார் நிறுவன ஊழியர் முகமது கவுஸ் என்பவரை மடக்கி, ஹவாலா பணம் என கூறி காரில் கடத்திச் சென்று, ரூ. 15 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் சிறப்பு எஸ்.ஐ-க்கள் ராஜா சிங், சன்னிலாய்டு மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோல் ஆயிரம் விளக்கு பகுதியில் கடந்த டிச.11-ம் தேதி ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை இதே பாணியில் வழிப்பறி செய்து, அதில் ரூ. 20 லட்சத்தை எடுத்துக்கொண்டு, மீதி ரூ. 20 லட்சத்தை அவரிடமே திருப்பி ஒப்படைத்து வி்ட்டதாக தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் உதவி எஸ்.ஐ-க்கள் ராஜாசி்ங், சன்னிலாய்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ், பாபு ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வணிகவரித்துறை அதிகாரிகள் மட்டும் தலைமறைவாக உள்ளனர். மற்ற 5 பேரும் ஏற்கெனவே கைதாகியுள்ள நிலையில், இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளான தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 3 பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், ஏற்கெனவே திருவல்லிக்கேணி வழிப்பறி வழக்கில் உயர் நீதிமன்றம் தங்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளதால், இந்த வழக்கிலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தங்களை கைது செய்திருப்பதாகவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், ‘‘இந்த வழக்கின் புலன்விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. காவல்துறை, வருமான வரித்துறை, வணிக வரித்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து திட்டமிட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இந்த 2 பேர் தவிர வேறு யாரிடமும் இதற்கு முன்பாக இவர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனரா என்பதையும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது. சென்னைக்கு பணத்துடன் வரும் நபர்களை நோட்டமிட்டு, துப்பு துலக்கி ஹவாலா பணம் என மிரட்டி, வழிப்பறியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இவ்வாறு வழிப்பறி செய்யும் பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 3 பேர் தலைமறைவாகவுள்ள நிலையில் இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது’’ என கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களான வருமான வரித்துறை அதிகாரிகள் மூவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT