Published : 19 Feb 2025 12:23 AM
Last Updated : 19 Feb 2025 12:23 AM
கோவையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையைச் சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், பிளஸ்-2 வரை படித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக படிப்பை நிறுத்திய அச்சிறுமி, பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 16-ம் தேதி இரவு அச்சிறுமி காணாமல்போய்விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உக்கடம் போலீஸில் அவரது பாட்டி புகார் அளித்தார். இதற்கிடையில், அடுத்த நாள் அச்சிறுமி வீட்டுக்கு வந்தார்.
அவரிடம் விசாரித்தபோது, நண்பர் வீட்டுக்குச் சென்றதாக தெரிவித்தார். தொடர்ந்து உக்கடம் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, சமூகவலைதளம் மூலம் பழக்கமான கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றிருந்ததாகவும், அங்கு கல்லூரி மாணவர்கள் 7 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: அந்த சிறுமிக்கு சமூகவலைதள செயலி மூலம் கல்லூரி மாணவர்கள் அறிமுகமாகியுள்ளனர். சில நாட்கள் பழகிய பின்னர், தங்கள் அறைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதன்படி, கடந்த 16-ம் தேதி மாணவர்கள் தங்கியுள்ள அறைக்குச் சென்ற அச்சிறுமியை, மொத்தம் 7 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, 7 மாணவர்களைக் கைது செய்துள்ளோம். நெல்லை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் கோவையில் 3 தனியார் கல்லூரிகளில் பயில்வது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் அனைவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றனர்.
தலைவர்கள் கண்டனம்: கோவை சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் புழங்குகின்றன. இவற்றைத் தடுக்காமல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறிவருகிறது. குற்றத்தை தடுக்க முதல்வர் என்ன செய்தார்? தனக்குத்தானே ‘அப்பா’ என்று புகழாரம் சூட்டிக்கொள்பவருக்கு இந்த மாணவி ‘மகள்’ போன்றவர் இல்லையா? கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கோவை சம்பவம், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதையே வெளிப்படுத்துகிறது. ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினமும் சிறுமிகள், மாணவிகள், காவலர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யாருக்குமே பாதுகாப்பு இல்லை. வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால், யாருக்கு என்ன பலன்?
இதேபோல, பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோரும் கோவை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT