Published : 18 Feb 2025 07:32 PM
Last Updated : 18 Feb 2025 07:32 PM
மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வழங்கிய மதநல்லிணக்க துண்டுப் பிரசுரங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் போலீஸாருக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் சங்கம் ஆகிய அமைப்பினர் முடிவெடுத்தனர். இது தொடர்பாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கிளைச் செயலாளர் தியாகராஜன், திருப்பரங்குன்றம் போலீஸில் நேற்று அனுமதி கோரி மனு அளித்தார்.
இந்நிலையில், இன்று காலையில் திருப்பரங்குன்றத்தில் பல்வேறு பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தனர். இது தொடர்பாக போலீஸார் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க தடை விதித்தனர். இதில் போலீஸாருக்கும் அந்த அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் வீடுகள் தோறும் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கியதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் உதவி ஆணையர் சசிபிரியா, அந்த அமைப்பினரோடு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கணேசன், ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இது குறித்து மார்ச் 1-ம் தேதி வரை அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள், கூட்டம் கூட்டுவதற்கு தடை உள்ளது. எனவே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கக் கூடாது என போலீஸார் தெரிவித்தனர். பின்னர் உதவி ஆணையரின் பேச்சுவார்த்தைக்குப் பின் அமைதியாக கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT