

மதுரை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்தி ராவ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரை அமர்வில் அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழக சட்டத்துறை கடந்த ஆண்டு ஜூலை 4-ல் அறிவிப்பு வெளியிட்டது. நான் முதுநிலை சட்டப்படிப்பு முடித்து 5 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிவதால் அரசு வழக்கறிஞர் பதவிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பட்டியல் பிப். 10-ல் அறிவிக்கப்பட்டது. அந்தப்பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. குறிப்பிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நான் உரிமையியல், குற்றவியல், மேல்முறையீடு வழக்குகள், சீராய்வு மனுக்கள் என 200 க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஆஜராகி உத்தரவு பெற்று போதிய அனுபவம் பெற்றுள்ள நிலையிலும் நான் அரசு வழக்கறிஞராக தேர்வாகவில்லை. என்னை விட அனுபவம் குறைந்த, எனக்கு பின்பு சட்டம் பயின்ற, போதுமான வழக்குகளில் ஆஜராகாத, போதுமான சட்டப்பயிற்சி பெறாத பலர் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு வழக்கறிஞர் தேர்வு விதிப்படியும், வெளிப்படையாகவும் நடைபெறவில்லை. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்விற்கான அரசு வழக்கறிஞர் நியமனத்தை ரத்து செய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியுடையவர்களை, வெளிப்படைத்தன்மையுடன் அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்து, அரசு வழக்கறிஞர் நியமனத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றனர். அரசு தரப்பில், மனுதாரர் அரசு வழக்கறிஞர் பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் தேர்வாகாததால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்யுக் கோரியுள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.