Published : 18 Feb 2025 05:40 PM
Last Updated : 18 Feb 2025 05:40 PM
சென்னை: “இதுதான் முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகின்ற மார்ச் மாதம் 14-ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இதனிடையே, திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என சொல்லப்பட்டது. உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி கன்னியாகுமரி மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். இது 100 நாளில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. திமுகவின் 377-வது வாக்குறுதியாக உள்ளது.
அது போல் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் என திமுக 153-வது வாக்குறுதியிலும் உள்ளது. எனவே 10 ஆண்டுகள் என்பதையும் கடந்து, 14 ஆண்டாக தற்காலிகமாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தற்போது ரூபாய் 12,500 என்ற குறைந்த சம்பளம் வழங்குவதால் வாழ்வாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. பகுதிநேர ஆசிரியர்களும் கோரிக்கை அனுப்பியும், போராடியும் வருகிறோம்.
மாணவர்கள் கல்வி மேம்படவும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் எதிர்காலம் நலன் கருதி, இந்த பட்ஜெட்டில் காலமுறை சம்பளம் வழங்க நிதி ஒதுக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2012 முதல் 2021 வரை திமுக வலியுறுத்திய கோரிக்கையை, இப்போது அனைத்து கட்சிகளும் திமுக அரசிடம் வலியுறுத்துகிறது. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்கள். இதுதான் முழுமையான பட்ஜெட் என்பதால் இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு கொள்கை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT