Published : 18 Feb 2025 05:37 PM
Last Updated : 18 Feb 2025 05:37 PM

“ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாரா ஸ்டாலின்?” - கோவை சம்பவத்தை முன்வைத்து எல்.முருகன் காட்டம்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் | கோப்புப்படம்

சென்னை: “கோவை குனியமுத்தூர் பகுதியில் 17 வயது சிறுமியை, கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினமும் அதிகரித்துக் கொண்டிருப்பது, அறிவார்ந்த தமிழ்ச் சமுதாய இளைஞர்களை, இந்த 'அறிவாலய மாடல் அரசு' பாழ்படுத்தி வைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை குனியமுத்தூர் பகுதியில் 17 வயது சிறுமியை, கல்லூரி மாணவர்கள் 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினமும் அதிகரித்துக் கொண்டிருப்பது, அறிவார்ந்த தமிழ்ச் சமுதாய இளைஞர்களை, இந்த 'அறிவாலய மாடல் அரசு' பாழ்படுத்தி வைத்திருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

'திறனற்ற திராவிட மாடல் அரசு' ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து சொந்த ஊர் விட்டு வெளி மாவட்டங்களில் தங்கிப் பயில்கின்ற கல்லூரி மாணவர்களின் கைகளில், போதைப் பொருள் புழக்கம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக, மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளோ அல்லது சட்டம்-ஒழுங்கு காவல்துறையோ, முறையான சோதனைகளில் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகத்தை தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

பெண் குழந்தைகள், பெண் காவலர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்தக் கொடூரக் குற்றங்களை, தன்னை மாண்புமிகு முதல்வராக கருதிக் கொண்டிருப்பவர் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாரா? அல்லது ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாரா? என்பதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். மாண்புமிகு 'போலி திராவிட மாடல்' முதல்வர் அவர்களே, உங்களது திமுக படையினரை வைத்து தமிழகத்தில் போதைக் கலாச்சாரத்தை வேரூன்றுவதற்கு பதில், பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள இளைய சமுதாயத்தினரிடத்தில் நல்லெண்ணங்களை வேரூன்ற முயற்சி செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x