Published : 18 Feb 2025 04:27 PM
Last Updated : 18 Feb 2025 04:27 PM

“ஜெயலலிதா கடைசி காலக்கட்டத்தில் ஓபிஎஸ் குறித்து என்னிடம் பகிர்ந்தது...” - ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை: ''கடைசி காலக்கட்டத்தில் ஓபிஎஸ் மீது ஜெயலலிதா நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரிகமாக இருக்காது என்பதால்தான் இதுவரை சொல்லவில்லை,'' என்று சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இது குறி்த்து அவர் மதுரையில் கூறியது: ''ஓ.பன்னீர்செல்வத்துக்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஏன் என்று சொன்னால், அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று மக்களிடத்திலே அந்தச் செய்தி சென்றுவிடக் கூடாது. ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தனக்குத்தானே அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா இருந்தபோது தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம்தான் அதிகாரம் மையம் என்று கட்சியினர் சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு உரிமை போராட்டத்துக்கு அவரை தள்ளி வைத்துவிட்டு இந்த சாமானிய தொண்டரான இந்த உதயகுமாரை தான் தேனி மாவட்டத்தில் தலைமை தாங்க உத்தரவிட்டார்.

அன்று முதல் ஓ.பன்னீர்செல்வம் யாரும் தன் அதிகாரத்துக்கு போட்டியாகவோ, இணையாகவோ, துணையாகவோ, அல்லது பின்னாலோ, முன்னாலோ எந்த வடிவத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்து வைத்த முயற்சிகள், நடவடிக்கைகள் எல்லாம் அவருடைய மனசாட்சிக்கு, தெய்வ சாட்சியாக விட்டுவிடுகிறேன். ஆனாலும், அதே 2010-ம் ஆண்டு இன்றைய மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலே செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற போது, இவரை தள்ளி வைத்துவிட்டு ஜெயலலிதா என்னை அந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக, ஆலோசனை வழங்குவதற்கு ஆணையிட்டார் என்பதை அந்த வரலாறையும் அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

அதேபோன்று 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், அப்போது நான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தேன். அப்போது தேனியில் தங்கத்தமிழ்ச் செல்வன் குடும்ப திருமண விழாவுக்கு என்னை அங்கே பங்கேற்க வைத்து, ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியும், அவரின் பரிசையும் கொடுப்பதற்கு எனக்கு ஆணையிட்டார். இப்படி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலக்கட்டத்தில் அவர், ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைத்துவிட்டதான் அவரது மாவட்டத்தில் என்னைதான் அனுப்பினார்.

ஜெயலலிதா கடைசிக் காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறைபாட்டில்தான் இருந்தார். அப்போது ஜெயலலிதா உங்கள் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார். அதை நான் வெளியே சொன்னால் அது அரசியல் நாகரிகமாக இருக்காது என்பதால்தான் இதுவரை சொல்லவில்லை.

உங்களைப் போன்று அதிகாரத்திற்காக, பதவிக்காக கட்சிக்கும் தலைமைக்கு என்றைக்கும் மாற்று சிந்தனையோ, எதிர் சிந்தனையோ கொண்டவன் நான் இல்லை. அன்றைக்கு ஜெயலலிதா இருந்தபோது டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்த போது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது என்று நீங்கள் சொல்லி உள்ளீர்கள். தயவு செய்து அதை சொல்லுங்கள். உங்களுடன் நான் எந்த நிலையில் அமர்ந்திருந்தேன் என்பதை நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் உட்கார்ந்து இருந்த இடத்திலே தான் நானும் உட்கார்ந்திருந்தேன்.

ஆகவே, தயவு செய்து நீங்கள் ஏதோ ஒரு மூடுமந்திரம் போல நீங்கள் வைத்திருப்பதனால் என்மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை என் கட்சி பணி மீது நான் தலைமை மீதும் கொண்டிருக்கும் விசுவாசத்தின் மீதும் நீங்கள் களங்கும் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நீங்கள் விரத்தியின் விளிம்பிலே இருந்து கேட்ட கேள்விக்கு நான் வேதனையின் உச்சியில் இருந்து உங்கள் கவனத்துக்கு நான் வைக்கின்றேன்.

உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதுதான் அதற்காக எந்த எல்லைக்கும் நீங்க போவீர்கள் என்பது தான் இந்த சமீப கால நடவடிக்கை உள்ளது. உங்களுக்கு இன்று கட்சி வேஷ்டி கூட கட்ட முடியாத அளவிற்கு நேர்ந்துள்ள சோதனைகளை எல்லாம் நீங்கள் ஏற்படுத்தியதுதான். வெளியில் இருந்து யாரும் எந்த சோதனையும் ஏற்படுத்தவில்லை. எனக்கு எச்சரிக்கை விடுகிற தகுதி உங்களுக்கு இல்லை. நான் எந்த எச்சரிக்கையும் எதிர்கொள்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன். இன்னும் விவாதிக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்பட்டால் நான் தயாராக இருக்கிறேன்'' என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x