Published : 18 Feb 2025 03:56 PM
Last Updated : 18 Feb 2025 03:56 PM

“அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி!” - ஆர்ப்பாட்டத்தில் பா.வளர்மதி பேச்சு

சென்னை: தமிழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிரணி செயலாளருமான பா.வளர்மதி உறுதிபட தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமை தாங்கிப் பேசியது: ''தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவிகள் முதல், பெண் காவலர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. கடந்த 100 நாளில் 63 பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து திமுக எம்பி கனிமொழியோ, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினோ இதுவரை எதுவும் பேசவில்லை.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலில் தொந்தரவுகளால் அப்பா என்று கதறும் பெண் பிள்ளைகளின் குரல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிராக உடனுக்குடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மட்டும்தான் குரல் கொடுத்து வருகிறார். அவரது தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தில் பாலியல் சீண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று அவர் பேசினார்.

அதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களை தடுக்காமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டிக்கும் வகையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர் தங்களது கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாணவரணி நிர்வாகிகள் திமுக அரசைக் கண்டிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த பதாகைகளை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x