

புதுச்சேரி: புதிய மதுபானத் தொழிற்சாலைகள், மதுக்கடைகளுக்கு அனுமதி தரும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசின் முடிவை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் இன்று நடத்தியது.
புதுச்சேரி கலால் துறை அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா. கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
போராட்டம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சலீம் கூறுகையில், “புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய மதுபானக் கொள்கைக்கான முடிவை எடுத்துள்ளது. புதிய மதுபான கடைக்கு உரிம அனுமதி, புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி, மதுபான விலைகள் ஏற்றம் ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 800 மதுபான கடைகளும், 200-க்கும் மேற்பட்ட புதிய ரெஸ்டோ பார்களும் உள்ளதால் திரும்பிய இடமெல்லாம் மதுபான கடைகள் உள்ளன. இதனால் போதைப் பழக்கம் பெருகி சமூக விரோத குற்றங்கள் அதிகரித்துள்ளன. மேலும், கணவனை இழந்த இளம் பெண்கள் எண்ணிக்கையும் அதிகரித்து புதுச்சேரியில் சமூகப் பிரச்சினையாக மாறி வருகிறது.
பெண்களுக்கு குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் இளம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் மேலும், புதிய மதுபான கடைகள் திறக்கப்படுவதால் புதுச்சேரி சமூகத்திற்கு பெரும் கேடு வந்துவிடும். புதிய மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் திறக்கப்படுவதால் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதனால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடும். நிலத்தடி நீரில் உள்ள டிடிஎஸ் அளவு குறையும், சுகாதாரமான குடிநீர் கிடைக்காது.
புதிய மதுபான கொள்கையில் ரூ.500 கோடி திரட்டி காமராஜர் கல்வி கடன் உட்பட சமூக நல திட்டங்களுக்கு செலவிடப்படும் எனும் கூற்று அபத்தமானது. பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகும். எனவே, புதுச்சேரி மாநில சமுதாயத்திற்கு பெறும் கேடு விளைவிக்கின்ற புதிய மதுபான கொள்கையை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என போராட்டம் நடத்தினோம்" என்றார்.