

சென்னை: ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப் பதிவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியில் 33 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆண்டுகள் பல கடந்தும் தமிழ்நாடு காவல்துறை, ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கினை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இவ்வழக்கை விசாரிக்க காவல்துறைக்கு விருப்பம் இல்லை என அதிருப்தி தெரிவித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது சிபிஐ 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்கிறது.
மேலும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில் மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடான பணி நியமனங்கள் நடைபெற்றது உறுதியான நிலையில் அவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த, தற்போதைய பால்வளத்துறை செயலாளர் சுப்பையன் என்ற ஐஏஎஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டும் மதுரை, திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யாமல் பால்வளத்துறை மற்றும் ஆவின் அதிகாரிகளின் ஆசியோடு பிற மாவட்டங்களுக்கு பணியிடை மாற்றம் செய்து விட்டனர்.
அத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதும், முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் தற்போது வரை பணியில் இருப்பதோடு அந்த முறைகேடுகளுக்கு காரணகர்த்தாவாக இருந்த ஆவின் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஊழல் செய்வதற்கென்றே ஆவின் அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுத்திய திட்டங்கள், ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்களிலும் தேவையற்ற இயந்திர தளவாடங்கள் கொள்முதல், பால் கொள்முதல், பால் பவுடர், வெண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் கொள்முதல் என ஆவினில் நடைபெற்றுள்ள பல முறைகேடுகளையும், அதனால் ஆவினுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககம் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டு தணிக்கை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டு (உதாரணம் 2019-2020) ஆவினுக்கும், அரசுக்கும் அறிக்கை தாக்கல் செய்தும் கூட கடுங்குறைகள் என சுட்டிக்காட்டப்பட்ட எந்த ஒரு அதிகாரிகள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், அவ்வாறான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி கெளரவிக்கப்பட்டிருப்பதும் மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.
எனவே கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடாக நடைபெற்ற 236 பணி நியமனங்கள், 2019-2021 இரண்டாண்டுகளில் மட்டும் ஆவினுக்கு சுமார் 36 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்திய C/F எனும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் நடைமுறை, அதிகபட்சமாக 4 லட்சம் ரூபாய்க்குள் வாங்க வேண்டிய மில்க் அனைலைசர் இயந்திரத்தை 82 லட்சம் ரூபாய்க்கு வாங்கி தற்போதைய ஆட்சியில் நடைபெற்ற 18 கோடி ரூபாய்க்கு மேலான இயந்திர தளவாடங்கள் கொள்முதல்,
அது போல 2021 ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு ஆவினுக்கான பால் கொள்முதலை திட்டமிட்டு குறைத்து கலப்படத்திற்கு பெயர் பெற்ற ராஜஸ்தான், மகராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் போலியான கூட்டுறவு பால் நிறுவனங்களை உருவாக்கி அந்நிறுவனங்களிடமிருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்ததன் மூலம் நடைபெற்ற பலகோடி ரூபாய் முறைகேடு என அனைத்து ஊழல், முறைகேடுகள் தொடர்பாகவும், கடந்த 2011ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககத்தின் ஆண்டு தணிக்கை அறிக்கையில் கடுங்குறைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஷரத்துகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சிபிஐ அமைப்பை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளார்.