வாலாஜா சாலை - எல்லீஸ் சாலை சந்திப்பு நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததால் பயணிகள் கடும் சிரமம்

வாலாஜா சாலை - எல்லீஸ் சாலை சந்திப்பு நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காததால் பயணிகள் கடும் சிரமம்
Updated on
1 min read

அண்ணா சதுக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல் லும் மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.

அண்ணாசாலையை ஒட்டியுள்ள வாலாஜா சாலையில் டி.1 (திருவல்லிக்கேணி காவல் நிலையம்) பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆவடி, பெரம்பூர், வள்ளலார் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாநகர பேருந்துகள் இந்த வழியாக அண்ணா சதுக்கம், திருவல்லிக்கேணிக்கு இயக்கப்படுகின்றன. மேற்கண்ட அனைத்து மாநகர பேருந்துகளும் டி.1 பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன. ஆனால், இந்த மாநகர பேருந்துகள் அண்ணா சதுக்கத்தில் இருந்து வரும் போது டி.1 காவல் நிலையத்துக்கு எதிர்புறத்தில் எல்லீஸ் ரோடு சந்திப்பு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நீண்ட தூரம் நடந்து எல்ஐசி அல்லது சிம்சன் பேருந்து நிறுத்தத்துக்கு சென்று மாநகர பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ``டி.1 பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் மாநகர பேருந்துகள் மற்றொரு புறத்தில் எல்லீஸ் ரோடு சந்திப்பில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. பேருந்து தடம் எண்கள் 29ஏ, 2ஏ, 27பி, 22பி ஆகியன பெல்ஸ் ரோடுக்கு அடுத்து கொஞ்ச தூரத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நிற்கின்றன. ஆனால், எல்லீஸ் ரோடு சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன. 4 சாலைகள் கூடும் பிரதான பேருந்து நிறுத்தமான இங்கு, பேருந்துகள் நிற்காமல் செல்வது பயணிகளுக்கு சிரமத்தையும் ஏமாற்றத்தையும் தருகி றது.

11எச், 27எச் வழித்தட பேருந்து கள் மட்டுமே இங்கு நிறுத்தப்படுகின்றன. இவை எழும்பூருக்கோ, சென்ட்ரல் போன்ற முக்கிய பகுதிகளுக்கோ செல்வதில்லை. இதனால், மக்கள் பேருந்துகளைப் பிடிக்க நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான பயணிகள் பயன் படுத்த வசதியாக இங்கு பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுபற்றி மாநகர போக்குவரத்து கழக அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் புகார் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். பயணிகள் அதிகளவில் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அந் தப் பேருந்து நிறுத்தத்தில் மாநகர பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in