பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: அண்ணாமலை, தினகரன் குற்றச்சாட்டு

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது: அண்ணாமலை, தினகரன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதல்வர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதல்வர்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், ‘பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி ஒருவர் செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை கூறி வருவது வேடிக்கையாக உள்ளது.

இனியாவது முதல்வர் ஸ்டாலின், தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in