Published : 18 Feb 2025 05:31 AM
Last Updated : 18 Feb 2025 05:31 AM
சென்னை: சென்னை அண்ணா சாலை அருகே எல்லீஸ் சாலையில் உள்ளது எல்லீஸ்புரம். இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதாகிவிட்டதால் அவற்றை இடிக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் நேற்று வந்தனர். வீடுகளை இடிக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையும் மீறி வீடுகளை இடிக்க முற்பட்டபோது ஆத்திரமடைந்த மக்கள் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாரும், அதிகாரிகளும் சமரசம் பேசியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து எல்லீஸ்புரம் பகுதி மக்கள் தெரிவித்ததாவது: எல்லீஸ்புரத்தில் உள்ள வீடுகள் மிகவும் பழுதாகி, வசிப்பதற்கு தகுதியற்றதாக இருப்பதால் வீடுகளைக் காலி செய்யும்படி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. 65 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். எங்களின் வாழ்வாதாரம் இங்கு இருப்பதால், எங்களுக்கும் எங்களின் குடும்பத்தினருக்கும் மட்டுமே வீடுகளை ஒதுக்க வேண்டும்.
வெளி நபர்களுக்கு இங்கு வீட்டை ஒதுக்கக்கூடாது. புதிதாக வீடுகளைக் கட்டி கட்சிக்காரர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே எதிர்க்கிறோம். மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. பெரும் சுகாதாரக் கேடு உள்ளது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி எந்தப் பலனும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தரப்பில் கூறப்படுவதாவது: எல்லீஸ்புரத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் 40 வீடுகளும், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்பில் 32 வீடுகளும் உள்ளன. இங்குள்ள வீடுகள் மிகவும் பழுதாகி வசிப்பதற்கு தகுதியற்றதாக உள்ளன.
அதனால் வீடுகளை இடித்து புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வாரியம் திட்டமிட்டுள்ளது. வீடுகளை காலி செய்யும்படி 4 முறை நோட்டீஸ் வழங்கியும் மக்கள் வீடுகளைக் காலி செய்யவில்லை. காலி செய்தவர்களின் வீடுகளில் உள்ள கதவுகள், ஜன்னல்களை அப்புறப்படுத்த சென்றபோது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பழைய குடியிருப்புகளையும், எல்லீஸ் சாலையோரத்தில் உள்ள கடைகளையும் இடித்துவிட்டு புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கடைகளும் கட்டித் தர வாரியம் திட்டமிட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் விரைவாக பணியைத் தொடங்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT